

புதுச்சேரி:
ஜிப்மரில் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனைத்து பதிவேடுகளிலும் இந்தி கட்டாயம் என ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தி.மு.க. எம்.பி. கனிமொழி விடுத்துள்ள கண்டன அறிக்கையில் மத்திய அரசுக்கு ஏன் இந்த மொழி வெறி? மத்திய அரசு திணிக்க முயலும் இந்தி வேலை இல்லா திண்டாட்டத்தை தீர்க்குமா? சமத்துவமின்மை மாறுமா? ஏதேனும் ஒரு சமூக பிரச்சினையை தீர்க்குமா? விரிசல்களை ஆழப்படுத்துவது நல்லதல்ல என தெரிவித்துள்ளார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜிப்மரில் இந்தி திணிப்பை கண்டித்து ம.தி.மு.க. சார்பில நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு ஜிப்மர் நுழைவு வாயில் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.
பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், ஜிப்மர் உள்ளிட்ட மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி திணிப்பை கைவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதே போல் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா இந்தி திணிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுவை மாநில காங்கிரசும் ஜிப்மரில் இந்தி திணிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்ரமணியன் விடுத்துள்ள அறிக்கையில் ஜிப்மரில் இந்தி திணிப்பை கண்டித்து காங்கிரஸ் தனியாகவும், கூட்டணி கட்சிகளுடனும் இணைந்து போராட்டம் நடத்துவோம் என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஜிப்மரில் இந்தி திணிப்பை கண்டித்து ஜிப்மர் மருத்துவமனை எதிரே புதுவை மாநில தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.