பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சண்டிமலின் மேல்முறையீட்டு மனுவை நிராகரித்தது ஐசிசி

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின்போது பந்தை சேதப்படுத்தியது தொடர்பாக இலங்கை அணி கேப்டன் சண்டிமல் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை ஐசிசி நிராகரித்துள்ளது. #DineshChandimal #BallTampering #ICC
பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சண்டிமலின் மேல்முறையீட்டு மனுவை நிராகரித்தது ஐசிசி
Published on

பார்படோஸ்:

வெஸ்ட் இண்டீஸ் - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்ற நிலையில், 2-வது டெஸ்ட் செயின்ட் லூசியாவில் நடைபெற்றது.

2-வது நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 2 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்திருந்தது. 3-வது நாள் ஆட்டத்திற்கு இலங்கை வீரர்கள் களம் இறங்க தயாராக இருந்த நிலையில், போட்டி நடுவர்கள் இலங்கை நிர்வாகத்திடம் 2-வது நாள் ஆட்டத்தின்போது இலங்கை அணி (கேப்டன் சண்டிமல்) பந்தை சேதப்படுத்தியுள்ளது. இதனால் வேறு பந்துடன் நீங்கள் பந்து வீச வேண்டும் என்று கூறினார்கள்.

இதற்கு இலங்கை அணி கேப்டன் சண்டிமல், பயிற்சியாளர் சண்டிகா ஹதுருசிங்கா, மானேஜர் அசங்கா குருசிங்கா ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் களம் இறங்க மறுத்துவிட்டனர்.

சுமார் ஒன்றரை மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பின் இலங்கை வீரர்கள் களம் இறங்கினார்கள். சண்டிமல் மீது பந்தை சேதப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதற்காக போட்டி நடுவர் அவருக்கு 100 சதவிகித அபாரத்துடன் ஒரு போட்டியில் விளையாட தடையும் விதித்தார். இதை எதிர்த்து சண்டிமல் மேல்முறையீடு செய்தார். இதுகுறித்து விசாரணை நடத்த மைக்கேல் பெலோஃப்-ஐ ஐசிசி அறிவித்தது.

இந்நிலையில், சண்டிமலின் மேல்முறையீட்டை மைக்கேல் பெலோஃப் நிராகரித்துள்ளார். சுமார் 4 மணி நேர விசாரணைக்கு பின்னர் இதை அவர் தெரிவித்தார். இதனால் இன்று தொடங்கும் வெஸ்ட் இண்டீஸ்-இலங்கை இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாட மாட்டார் என கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, இன்றைய போட்டியில் சண்டிமலுக்கு பதிலாக சுரங்கா லக்மல் கேப்டனாக களமிறங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டாவது போட்டியின் 3-வது நாள் ஆட்டத்தின்போது சுமார் ஒன்றரை மணிநேரம் தாமதமாக களமிறங்கியதற்காக சண்டிமல், பயிற்சியாளர் சண்டிகா ஹதுருசிங்கா, மானேஜர் அசங்கா குருசிங்கா ஆகியோர் மீது  குற்றம்சாட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #DineshChandimal #BallTampering #ICC

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com