

அ.தி.மு.க.வில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிக்கும், டி.டி.வி. தினகரன் தலைமையிலான அணிக்கும் ஏற்பட்டுள்ள மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு தினகரன் அணியில் இருந்த ஜக்கையன் எம்.எல்.ஏ. திடீரென்று எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு தாவினார். இதைத் தொடர்ந்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அணி மாறிவிடக் கூடாது என்பதற்காக அவர்கள் ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
நேற்று முன்தினம் புதுச்சேரி விடுதியை காலிசெய்து விட்டு 19 எம்.எல்.ஏ.க்கள் அன்று இரவே பெங்களூரு வந்து ஒரு நட்சத்திர விடுதியில் தங்கினார்கள். நேற்று காலை அவர்கள் ஒரு பஸ்சில் புறப்பட்டு சென்றனர். அவர்கள் தங்க மைசூர் மற்றும் மைசூரை அடுத்த குடகு மலையில் உள்ள வின்ட் பிளவர் ரிசார்ட் ஓட்டலில் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு இருந்தது.
ஆனால், எம்.எல்.ஏ.க்கள் யாரும் அங்கு வரவில்லை. ஆனால், அவர்களது உறவினர்கள் ஒரு சிலர் மட்டும் அங்கு வந்து தங்கினர். அவர்களும் நேற்றிரவு அறையை காலிசெய்துவிட்டு சென்றுவிட்டனர்.
தற்போது தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எங்கு தங்கி இருக்கிறார்கள் என்ற விவரம் அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை. அவர்கள் பெங்களூருவிலேயே தங்கி இருப்பதாக ஒரு தகவல் வெளியானது.
இதுகுறித்து கர்நாடக மாநில அ.தி.மு.க. அம்மா அணி செயலாளர் புகழேந்தியிடம் கேட்டபோது, எம்.எல்.ஏ.க்கள் பெங்களூருவில் இல்லை என்று கூறினார்.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மைசூருவில் இருந்து கேரளா செல்லும் வழியில் சோமவார்ப்பேட்டையில் உள்ள ஒரு ரிசார்ட்டில் தங்கி இருப்பதாக இன்று காலை தகவல் வெளியானது. ஆனால், அங்கு சென்று பார்த்தபோது எம்.எல்.ஏ.க்கள் யாரும் அங்கு இல்லை.
ஜக்கையன் எம்.எல்.ஏ. எடப்பாடி பழனிசாமி அணிக்கு தாவியதால் மற்ற எம்.எல்.ஏ.க்கள் யாரும் தாவிவிடக்கூடாது என்பதற்காக ரகசிய இடத்தில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி அணியினர் ரகசிய வியூகம் வகுத்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவராக தங்களது அணிக்கு இழுத்து வலுசேர்த்து வருகிறார்கள். அவர்கள் அணி வலுவாகி மெஜாரிட்டி பெற்று விடக்கூடாது என்பதில் தினகரன் உறுதியாக உள்ளார்.
எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் பதவி விலகினால் பிரச்சினைக்கு முடிவு வரும் என்று தினகரன் கூறி இருக்கிறார். இதனால்தான் தங்களது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தினகரனுக்கு வந்துள்ளது. இதனால்தான் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை அவர் ரகசிய இடத்தில் தங்க வைத்துள்ளார்.
தற்போது தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தங்கி உள்ள வீடு பெங்களூரில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அது எந்த இடம் என்பது அவர்களுக்கே தெரியவில்லை. இதுகுறித்து எம்.எல்.ஏ. தங்கதமிழ்செல்வனிடம் இன்று கேட்டபோது, எம்.எல்.ஏ.க்கள் தங்கி இருக்கும் இடம் எது என்று எங்களுக்கே தெரியாது. ஆனால், ரகசிய இடத்தில் நாங்கள் தங்கி இருக்கிறோம் என்றார். ஒருவாரத்திற்கு எங்கள் முகத்தை வெளியே காட்டமாட்டோம் என்றும் அவர் கூறினார்.
எம்.எல்.ஏ.க்கள் ரகசியமாக தங்கியுள்ள ரிசார்ட்டு மிகப்பெரிய பண்ணை வீடுபோல உள்ளது.
அங்கு பாதுகாப்பு அம்சங்கள் அதிகம். அந்த வீட்டுக்கு அவ்வளவு சுலபமாக யாரும் சென்ற விட முடியாது. அந்த பண்ணை வீட்டு வளாகத்திலேயே நடைபயிற்சி மைதானம் மற்றும் விளையாட்டு மைதானம், நீச்சல் குளம் ஆகியவை உள்ளது.
மேலும், எம்.எல்.ஏ.க்கள் தங்கள் முகத்தை மீடியாக்களிடம் காட்டக்கூடாது என்றும், யாரிடமும் செல்போனில் பேசக்கூடாது என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
உறவினர்கள் மற்றும் தினகரன் ஆதரவாளர்கள் பேசினால் மட்டுமே செல்போனில் பேச வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்பில்லாத நபர்கள் அல்லது புதிய செல்போன் எண்களில் இருந்து அழைப்பு வந்தால் பேசக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
எம்.எல்.ஏ.க்களை சந்திக்க யாராவது வந்தால் அவர்களை உள்ளே அனுமதிக்கக் கூடாது என்றும் கட்டளை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. எம்.எல்.ஏ.க்களுக்கு பாதுகாப்பாக சென்னையில் இருந்து சென்ற பவுன்சர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேரும், 4 பிரிவாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதில் ஒரு எம்.எல்.ஏ. ஒரு அறையிலும், 9 எம்.எல்.ஏ.க்கள் தனியாகவும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பெண் எம்.எல்.ஏ.க்கள் அவர்களது குடும்பத்தினருடன் தனியாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மற்றொரு வீட்டில் 5 எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
ஒரு வாரம் அவர்கள் இங்கு தங்க வைக்கப்பட்டு இருப்பார்கள் என்றும், அதற்கு பிறகு அவர்கள் சென்னை திரும்புவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டசபையில் பெரும்பான்மை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமிக்கு கவர்னர் உத்தரவிட்டால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சென்னை வரவேண்டிய சூழ்நிலை ஏற்படும்.