

சென்னை:
அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி அணியினருக்கும், தினகரன் அணியினருக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது.
கட்சியில் இருந்து சசிகலாவையும், தினகரனையும் ஒதுக்கி வைத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கடந்த சில தினங்களுக்கு முன்பு தெரிவித்தார்.
சிறையில் இருந்து தினகரன் விடுதலையான நேரத்தில் ஜெயக்குமார் தெரிவித்த இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது. தினகரன் ஆதரவாளர்கள் மத்தியில் இது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கட்சியில் இருந்து யாரையும் நீக்கும் அதிகாரத்தை அமைச்சர்களுக்கு யார் கொடுத்தது என்று தினகரன் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். பெசன்ட்நகரில் உள்ள தினகரனின் வீட்டில் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அவரை தினமும் சந்தித்து பேசி வருகிறார்கள். இதுவரை 32 எம்.எல்.ஏ.க்கள் தினகரனை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
சசிகலாவையும் தினகரனையும் கட்சியில் இருந்து ஒதுக்கி வைப்பதாக அமைச்சர்கள் கூறுகிறார்கள். ஆனால் அவர்களை நீக்கும் அதிகாரம் கட்சியின் பொதுச்செயலாளரான சசிகலாவுக்கு மட்டுமே உள்ளது என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான தங்கதமிழ்செல்வன், போஸ் ஆகியோர் கூறி இருக்கிறார்கள்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். அவர் கட்சி பணியை தொடர முடியாத சூழ்நிலையில் தான் துணை பொதுச்செயலாளராக தினகரனை நியமித்துள்ளார்.
இவர்களை கட்சியில் இருந்து ஒதுங்கி இருக்க சொல்வதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை. கடந்த ஓராண்டாக கட்சியில் என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை.
கட்சியை பலப்படுத்த வேண்டும் என்கிற ஒரே நோக்கத்திலேயே எம்.எல்.ஏ.க்கள் தொடர்ச்சியாக தினகரனை சந்தித்து வருகிறார்கள். வேறு எந்த உள் நோக்கமும் இல்லை. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாமல் ஆட்சியை அவர் வழி நடத்துவார். கட்சியை தினகரன் வழிநடத்தி செல்வார்.
எங்களுக்குத்தான் முழு ஆதரவு உள்ளது. உண்மையான அ.தி.மு.க. நாங்கள் தான். தன்னை சந்திக்க வரும் ஆதரவாளர்களிடம் ஒற்றுமையோடு இருந்து அனைவரும் கட்சியை வலுப்படுத்த உழைக்க வேண்டும் என்று தினகரன் கூறி வருகிறார்.
எங்களுக்குள் எந்த பிளவும் இல்லை. இன்று அமைச்சர்கள் ஏதோ அதிகாரம் தங்கள் கைக்கு கிடைத்து விட்டது போல பேசக்கூடாது. இந்த பதவிக்கு யாரால் எப்படி வந்தோம் என்பதை உணர்ந்து அமைச்சர்கள் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. போஸ் கூறியதாவது:-
அ.தி.மு.க.வில் இருந்து ஒருவரை நீக்க வேண்டும் என்றால் கட்சியில் பொதுச்செயலாளர் பதவியில் இருப்பவர் கையெழுத்திட்டு அவர் நீக்கப்பட்டதற்கான அறிவிப்பு நமது எம்.ஜி.ஆர். நாளிதழில் கட்டம் கட்டி வெளியிடப்படும். இது அ.தி.மு.க.வின் அடிமட்ட தொண்டனுக்கும் தெரியும்.
ஆனால் எதுவுமே தெரியாதது போல அமைச்சர் ஜெயக்குமாரும் மற்ற அமைச்சர்களும் தினகரனுக்கு எதிராக கருத்துகளை தெரிவித்து வருவது ஏன் என்று தெரியவில்லை.
இப்படி பேசும் அமைச்சர்கள் அறியாமல், புரியாமல் பேசுகிறார்கள் என்றுதான் கூறவேண்டும். அ.தி.மு.க.வின் சட்ட திட்டங்களின்படி எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே பொதுச்செயலாளர் மட்டுமே கட்சியில் முழு அதிகாரம் படைத்தவர் ஆவார். அந்தவகையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மட்டுமின்றி அமைச்சர்களையும் நீக்கும் அதிகாரம் கட்சியின் பொதுச்செயலாளரான சசிகலாவுக்கு மட்டுமே உண்டு. இதனை அமைச்சர்கள் மறந்து விட்டார்களா?
அமைச்சரானவுடன் பவர் வந்து விட்டதாக யாரும் எண்ணிவிட வேண்டாம். கட்சியை பொறுத்தவரையில் அந்த அதிகாரம் சசிகலாவிடம் மட்டுமே உள்ளது. அவர் இல்லாத இடத்தில் இருந்து தினகரனே கட்சி பணியை ஆற்றி வருகிறார். அ.தி.மு.க.வின் 1½ கோடி தொண்டர்களும் அவரை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் துணை பொதுச்செயலாளர் என்கிற முறையில் தினகரனை சந்தித்து பேசி வருகிறார்கள். அவரால் மட்டுமே கட்சியை திறம்பட வழி நடத்தி செல்ல முடியும் என்று நம்புகிறார்கள். அதே நேரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியே ஆட்சியை வழிநடத்துவார்.
இவ்வாறு போஸ் எம்.எல்.ஏ. கூறினார்.