தளவாய்புரம் அருகே விநாயகர் சிலை திருடிய 2 பேர் கைது

தளவாய்புரம் அருகே விநாயகர் சிலை திருடிய 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தளவாய்புரம் அருகே விநாயகர் சிலை திருடிய 2 பேர் கைது
Published on

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் சாமி மற்றும் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அசையாமணி விலக்கு பகுதியில் அவர்கள் வந்தபோது 3 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது 3 பேரும் முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் விநாயகர் மற்றும் மூஞ்சுறு கற்சிலைகள் இருப்பது தெரியவந்தது.

அப்போது ஒருவர் தப்பி ஓடிவிட்டார். இதனைத் தொடர்ந்து 2 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர்களது பெயர் விநாயகர் (வயது 39), சக்திவேல் (35) என்பதும், தப்பி ஓடியவர் முத்துக்குமார் என்பதும் தெரியவந்தது.

இவர்கள் விநாயகர் சிலையை எங்கிருந்து திருடினர்? யாருக்காக திருடினர்? சிலை திருடும் கும்பலுடன் தொடர்பு உடையவர்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com