திருப்பதியில் தினமும் 4 லட்சம் லட்டுகள் தயாரிக்க ஏற்பாடு

திருப்பதியில் அடுத்த வாரத்தில் இருந்து லட்டு பிரசாதம் தயாரிக்கும் எண்ணிக்கையை உயர்த்தி தினமும் 4 லட்சம் லட்டுகள் தயாரித்து வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
திருப்பதியில் தினமும் 4 லட்சம் லட்டுகள் தயாரிக்க ஏற்பாடு
Published on

திருமலை:

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். பக்தர்களுக்கு வினியோகம் செய்வதற்காக தினமும் 3 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. நாளுக்குநாள் பக்தர்களின் வருகை மேலும் அதிகரித்து வருகிறது. எனவே கூடுதலாக லட்டு பிரசாதம் தயாரித்து வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு கூறியதாவது:-

திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ளே லட்டு பிரசாதம் தயாரிக்கப்பட்டு வருகிறது. அங்கு, போதிய இடவசதி இல்லாததால் கூடுதலாக லட்டு பிரசாதத்தை தயாரிக்க முடியவில்லை. உக்ரானம் என்ற பகுதியில் கூடுதல் இடவசதி அமைக்கப்பட்டு வருகிறது. அடுத்த வாரத்தில் இருந்து லட்டு பிரசாதம் தயாரிக்கும் எண்ணிக்கையை உயர்த்தி தினமும் 4 லட்சம் லட்டுகள் தயாரித்து வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. கோவில் உள்ளே அதிக லட்டு தயாரிக்க தேவையான இடவசதி விரிவாக்கப் பணி கடந்த 2 மாதங்களாக நடந்து வருகிறது.

கோவிலுக்கு வெளியே பூந்தி தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. பூந்தி தயாரித்து கிரேன் மூலமாக உள்ளே அனுப்பப்பட்டு லட்டாக தயார் செய்து மீண்டும் கிரேன் மூலமாக வெளியே கொண்டு வந்து லட்டு கவுண்ட்டர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பூந்தி தயாரிக்க கூடுதல் இடம் தேவைப்படுகிறது. ஏற்கனவே பூந்தி தயாரிக்கும் இடத்தின் அருகே காலிமனை உள்ளது. அதனை சீரமைத்து, அந்த இடத்தில் பூந்தி தயாரிக்க தேவையான மூலப்பொருட்களை இருப்பு வைத்துக் கொள்ளலாம், பூந்தி தயாரிக்கவும் பயன்படுத்தி கொள்ளலாம். இந்தப் பணிகள் ஆகம சாஸ்திர படி நடந்து வருகிறது.

வைஷ்ணவ சம்பிரதாய படி பிராமணர்கள் 20 பேர் ஒப்பந்த அடிப்படையில் லட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஒரு சிப்ட்டில் 10 பேர் வீதம் பணியில் அமர்த்தப்படுவர். ஒரு ஊழியர் தினமும் 5 ஆயிரத்துக்கும் குறையாமல் லட்டுகளை தயாரிக்க வேண்டும்.

பக்தர்கள் லட்டுக்காக சிபாரிசு கடிதம் பெற்று வர வேண்டாம். நேரிடையாக வந்து யார் எவ்வளவு லட்டுகளை வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com