ஆண்டாள் பற்றி விமர்சனம்: வைரமுத்துக்கு ஆதரவும், எச்.ராஜாவுக்கு எதிர்ப்பும் வலுக்கிறது

ஆண்டாள் பற்றிய விமர்சனம் தொடர்பாக வைரமுத்துவுக்கு ஆதரவாகவும், எச்.ராஜாவை எதிர்த்தும் தொடர்ந்து கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டாள் பற்றி விமர்சனம்: வைரமுத்துக்கு ஆதரவும், எச்.ராஜாவுக்கு எதிர்ப்பும் வலுக்கிறது
Published on

சென்னை:

கவிஞர் வைரமுத்து ‘‘தமிழை ஆண்டாள்’’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை சமீபத்தில் ஒரு பத்திரிகையில் வெளியானது.

அதில் ஆண்டாள் பற்றி அவர் குறிப்பிட்டிருந்த சில வி‌ஷயங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு உடனடியாக கண்டன குரல்கள் எழுந்தன. இந்து அமைப்புகள் சார்பில் போலீசிலும் புகார் அளிக்கப்பட்டன. தான் எழுதிய கட்டுரையில் ஆண்டாள் பற்றி நான் எனது தனிப்பட்ட கருத்து எதையும் அதில் குறிப்பிடவில்லை.

பல்கலைகழக ஆராய்ச்சி கட்டுரையில் எழுதப்பட்டிருந்த கருத்தையே மேற்கோள்காட்டி இருந்தேன் என்றும் வைரமுத்து தெரிவித்திருந்தார். இதனால் யாருடைய மனமும் புண்பட்டிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறி இருந்தார்.

இருப்பினும் ஆண்டாள் குறித்து அவர் தெரிவித்த கருத்துக்களுக்கு எதிர்ப்பு வலுத்தது. பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா, வைரமுத்துவை கண்டித்து கடுமையாக பேசினார். அவரது இந்த பேச்சுக்கு எதிர்ப்பு வலுத்துள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில் வைரமுத்து பற்றி தெரிவித்த கருத்துக்களுக்காக எச்.ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தார். டைரக்டர் பாரதிராஜாவும், எச்.ராஜாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் எச்.ராஜா நாவடக்கம் இன்றி பேசினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். அனைத்து ஜனநாயக சக்திகளும் அவரை கண்டிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இப்படி எச்.ராஜாவுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.

இதற்கிடையே நடிகர் எஸ்.வி.சேகரும், வைரமுத்துவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

மூளையிலும், நாக்கிலும் சனி அமர்ந்துள்ள வைரமுத்து, கனிமொழி இருவர் மூலமாக ஆண்டாள் அருளால் இனி தி.மு.க. ஆட்சிக்கு வர வாய்ப்பில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. விரைவில் வீரமணி நாவின் மீது அமர்ந்திருக்கும் சனி மூலமாக உறுதி செய்யப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

கபாலி பட இயக்குனர் பா.ரஞ்சித்தும் வைரமுத்துவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இப்படி வைரமுத்துவுக்கு ஆதரவாகவும், எச்.ராஜாவை எதிர்த்தும் தொடர்ந்து கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #TamilNews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com