பி.சி.ஆர். சோதனையை தீவிரமாக்க முடிவு- சென்னையில் தினமும் 1000 பேருக்கு பரிசோதனை

சென்னையில் தேவையான அளவு பி.சி.ஆர். சோதனை மையங்கள் இருப்பதால் சராசரியாக 1000 பேருக்கு தினமும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் பரிசோதனை
கொரோனா வைரஸ் பரிசோதனை
Published on

சென்னை:

கொரோனா பாதிப்பை விரைவாக கண்டுபிடிப்பதற்காக சீனாவில் இருந்து ரேபிட் டெஸ்ட் கருவி இறக்குமதி செய்யப்பட்டது.

இதில் பெரும்பாலான கருவிகளில் சோதனை முடிவுகள் தவறாக தெரிய வந்ததால் 2 நாட்களுக்கு ரேபிட் டெஸ்ட் கருவிகளை பயன்படுத்த வேண்டாம் என்று அனைத்து மாநிலங்களுக்கும் இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டிருந்தது.

சீனாவில் இருந்து வரவழைக்கப்பட்ட ரேபிட் டெஸ்ட் கருவிகளை தொடர்ந்து இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வுக்கு உட்படுத்தி வருகிறது. அந்த கருவிகளில் முடிவுகள் தவறாக வருவதற்கு காரணம் நமது நாட்டில் உள்ள தட்ப வெப்பநிலை என்று கூறப்படுகிறது.

குறைந்த வெப்பநிலையில் தான் இந்த கருவி செயல்படும்போது முடிவுகளும் சரியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. எனவே நமது நாட்டுக்கு இந்த கருவிகளில் பரிசோதனை செய்வது ஒத்துவருமா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

எனவே இன்னும் ரேபிட் டெஸ்ட் கருவிகளை பயன்படுத்த இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி அளிக்கவில்லை. எனவே இன்றும் ரேபிட் டெஸ்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பி.சி.ஆர். சோதனை என்று சொல்லப்படும் துல்லியமான சோதனையை தீவிரப்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி மாநிலம் முழுவதும் பி.சி.ஆர். சோதனைகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த சோதனை முடிவுகள் வருவதற்கு 2 நாட்கள் வரை ஆகும் என்று கூறப்படுகிறது. ஆனால் முடிவுகள் துல்லியமானவை. சென்னையை பொறுத்தவரை 15 மண்டலங்களிலும் தேவையான அளவு பி.சி.ஆர். சோதனை மையங்கள் இருப்பதாகவும், சராசரியாக 1000 பேருக்கு தினமும் டெஸ்டுகள் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com