

கன்னியாகுமரி:
தெற்கே இந்திய பெருங்கடலும், கிழக்கே வங்கக்கடலும், மேற்கே அரபிக்கடலும் அமைய பெற்று முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமமாக கன்னியாகுமரி விளங்குகிறது. தினமும் அதிகாலை சுமார் 6.10 மணிக்கு கிழக்கே வங்க கடலில் சூரியன் உதயமாகும். அப்போது கடலுக்கு அடியில் இருந்து இளம் செம்பழுப்பு நிறத்தில் சூரியன் மெல்ல மெல்ல எழும்பும் காட்சி பார்ப்பதற்கே கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
இந்த அற்புத காட்சியை காண அதிகாலை 5 மணியில் இருந்தே கன்னியாகுமரி முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம், சங்கிலித்துறை கடற்கரையில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கூடுவர். அவர்கள் கடற்கரையில் நீண்டநேரம் காத்திருந்து சூரிய உதயத்தை பார்த்து ரசிப்பார்கள். சூரியன் கடலை விட்டு மேலே எழும்பும் போது கடற்கரையில் கூடி நிற்கும் சுற்றுலா பயணிகள் உற்சாக மிகுதியால் கைதட்டி ஆரவாரம் செய்வார்கள்.
பெரும்பாலான சுற்றுலா பயணிகள் தங்களது கேமராக்கள் மூலமும், செல்போன்கள் மூலமும் சூரியன் உதயமாகும் ரம்மியமான காட்சியை படம் பிடித்து செல்வார்கள். சில சுற்றுலா பயணிகள் கேமராக்களில் கிராபிக்ஸ் மூலம் கடலில் சூரியன் உதயமாகும் காட்சியை தங்களது கைகளில் தாங்கி பிடிப்பது போன்றெல்லாம் படம் பிடிப்பார்கள். அந்த அளவுக்கு கன்னியாகுமரியில் சூரியன் உதயமாகும் காட்சியை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டுகளிப்பார்கள்.
அதேபோல கன்னியாகுமரியில் தினமும் மாலை சுமார் 6.20 மணிக்கு மேற்கே அரபிக்கடலில் சூரியன் மறையும் காட்சியையும் காணலாம். இந்த அற்புத காட்சியை காண்பதற்காக ஒரு இடத்தை தேர்வு செய்துள்ளனர். அந்த இடத்துக்கு சன்செட் பாயிண்ட் என்று பெயர்.
எனவே கடற்கரையில் சன்செட் பாயிண்ட் பகுதியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் மாலை நேரத்தில் திரள்வார்கள். சூரியன் மறையும் போது, வானத்தில் இளம் மஞ்சள் நிறத்தில் நெருப்பு பந்து போன்ற வடிவத்தில் சூரியன் கடலுக்குள் மெல்ல மெல்ல இறங்கி மறையும்.
நவம்பர் மாதம் இறுதி முதல் மே மாதம் கடைசி வரை 7 மாதங்களும் மேகமூட்டம் அவ்வளவாக இருக்காது. எனவே கன்னியாகுமரியில் சூரியன் கடலுக்குள் மறையும் காட்சியை தெள்ளத்தெளிவாக பார்க்க முடியும். மற்ற இடங்களில் கடலில் சூரியன் உதயமாகும் காட்சியை கண்டுகளித்தாலும் கடலில் சூரியன் மறையும் காட்சியை காண முடியாது.
அந்த இடங்களில் சூரியன் மலைகளுக்கு இடையிலோ அல்லது அடர்ந்த மரங்கள் நிறைந்த சோலைகளுக்கு இடையிலோதான் மறைவதை பார்க்க முடியும். ஆனால் கன்னியாகுமரியில் மட்டும்தான் சூரியன் உதயமாகும் காட்சியையும், சூரியன் மறையும் காட்சியையும் ஒரே இடத்தில் பார்க்க முடியும். அப்படிப்பட்ட அபூர்வமான இடமாக கன்னியாகுமரி திகழ்கிறது. அதனால்தான் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் ஒரு நாளைக்கு முன்னதாகவே கன்னியாகுமரிக்கு வந்து மாலையில் சூரியன் மறையும் காட்சியை கண்டு களித்துவிட்டு இரவு விடுதிகளில் தங்கிவிட்டு மறுநாள் அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை பார்த்து ரசிக்கிறார்கள்.
அதன்பிறகு கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமம், பகவதி அம்மன் கோவில், விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை, காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம் உள்ளிட்ட இடங்களை பார்த்து விட்டு தங்களது ஊர்களுக்கு செல்வர். கன்னியாகுமரிக்கு சுற்றுலா வருவோர்களில் பெரும்பாலானோர் சூரிய உதயத்தையும், சூரிய அஸ்தமனத்தையும் பார்ப்பதற்காகவே வருவர். கடந்த ஆண்டு மட்டும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமான காட்சியையும், மறைந்த காட்சியையும் பார்வையிட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அலுவலக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இப்படி லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் பார்வையிடும் சூரியன் உதிக்கும், மறையும் காட்சியை கன்னியாகுமரியில் யாரும் பார்க்க முடியாத வகையில் செய்து விட்டது இந்த கொரோனா. ஊரடங்கால் சுற்றுலா பயணிகள் வருகை இல்லை.
இதனால் தினமும் காலையில் சுற்றுலா பயணிகள் இல்லாமலேயே சூரியன் உதிப்பதும், சுற்றுலா பயணிகள் இல்லாமலேயே சூரியன் மறைவதும் வழக்கமாகி விட்டது. ஊரடங்கு எப்போது முடியும், சூரியன் உதிப்பதையும், மறைவதையும் எப்போது கண்டு ரசிப்பது என்ற ஏக்கத்தில் சுற்றுலா பயணிகள் உள்ளனர்.
மேலும் ஆண்டுதோறும் சித்ராபவுர்ணமி அன்று கன்னியாகுமரியில் ஒரே நேரத்தில் சூரியன் மறைவையும் சந்திரன் உதயமாகும் அபூர்வ காட்சியையும் காணலாம். இந்த அற்புத காட்சியை காண சித்ரா பவுர்ணமி அன்று கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கூடுவார்கள். ஆனால் இந்த ஆண்டு நாளை (வியாழக்கிழமை) சித்ரா பவுர்ணமி, கொரோனா ஊரடங்கு காரணமாக கன்னியாகுமரியில் இந்த அபூர்வமான காட்சி சுற்றுலா பயணிகள் காண முடியாதது வரலாற்றில் இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.