தீபக் மிஸ்ராவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவிநீக்க தீர்மானம் - காங்கிரஸ் கட்சி தீவிரம்

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவிநீக்க தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் கட்சி தீவிர முயற்சியில் ஈடுபட்டு உள்ளது.
தீபக் மிஸ்ராவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவிநீக்க தீர்மானம் - காங்கிரஸ் கட்சி தீவிரம்
Published on

புதுடெல்லி:

இந்திய நீதித்துறையின் தலைமை பீடமாக விளங்கும் சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதியாக இருப்பவர் தீபக் மிஸ்ரா. இவர் சக நீதிபதிகளுக்கு வழக்குகள் ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாக கடந்த ஜனவரி மாதம் சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகுர், குரியன் ஜோசப் ஆகிய 4 பேரும் செய்தியாளர்களை சந்தித்து குற்றம் சாட்டினர்.

இந்திய நீதித்துறை வரலாற்றிலேயே முதல் முறையாக நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் தீபக் மிஸ்ராவுக்கு எதிராக அப்போதே கண்டனக்குரல்கள் எழுந்தன.

இந்த நிலையில் தீபக் மிஸ்ராவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானம் (பதவி நீக்க தீர்மானம்) கொண்டு வர காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. மாநிலங்களவையில் கொண்டு வரும் இந்த தீர்மானத்தை ஆதரிக்குமாறு எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து காங்கிரஸ் தலைவர்கள் வேண்டுகோள் விடுப்பதுடன், இதற்கான ஆதரவு கடிதத்திலும் கையெழுத்து வாங்கி வருகின்றனர்.

காங்கிரசின் இந்த முடிவுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்து உள்ளது. காங்கிரசின் ஆதரவு கடிதத்தில் கையெழுத்து போட்டதாக தேசியவாத காங்கிரசின் மாநிலங்களவை உறுப்பினர் மஜீத் மேமன் தெரிவித்தார்.

இது குறித்து பிஜு ஜனதாதளம் கட்சியின் மக்களவை தலைவர் பரத்ருகாரி மக்தாப் கூறுகையில், ‘இந்த விவகாரம் (பதவி நீக்க தீர்மானம்) குறித்து எங்களுக்கு அவ்வளவாக தெரியாது. ஊடகங்களில் வந்த தகவல்களை பார்த்துதான் நாங்கள் தெரிந்து கொண்டோம். அதைப்போல காங்கிரசின் தீர்மான வரைவு நகலில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்தும் எங்களுக்கு எதுவும் தெரியாது’ என்றார்.

நீதிபதி ஒருவரை பதவி நீக்குவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு, மாநிலங்களவை என்றால் 50 எம்.பி.க்களின் ஆதரவும், மக்களவை என்றால் 100 எம்.பி.க்களின் ஆதரவும் தேவை. தீபக் மிஸ்ராவுக்கு எதிரான தீர்மானத்தை மாநிலங்களவையில் தாக்கல் செய்ய காங்கிரஸ் முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com