

கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபை கடந்த 26-5-2014 அன்று நாட்டின் ஆட்சித் தலைமைக்கு பொறுப்பேற்று கொண்டது.
நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பின்னர் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்தியும் வருகிறது. இத்தகைய திட்டங்களால் அடித்தட்டு மக்கள் எவ்வித பலனையும் பெறவில்லை என்று காங்கிரஸ், இடதுசாரி மற்றும் இதர எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில், இன்றுடன் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு தனது மூன்றாண்டு கால ஆட்சியை நிறைவு செய்கிறது. இந்நிலையில், கடந்த மூன்றாண்டு காலத்தில் மத்திய அரசு எடுத்துள்ள நிலையான நடவடிக்கைகளால் நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்பாடு அடைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, மக்களின் கூட்டுறவுடன் இந்த அரசின் மீது நம்பிக்கையும், இதன் விளைவாக முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்றாண்டுகளில் மத்திய அரசு எடுத்துள்ள ஸ்திரமான நடவடிக்கைகளால் மக்களின் வாழ்க்கத்தரம் மேம்பாடு கண்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இதே கருத்தை பிரதிபலிக்கும் வகையில் தனது தலைமையிலான ஆட்சிக்காலத்தில் நாட்டில் விவசாயம், கைபேசி மூலம் வங்கிச் சேவை, மகளிர்களுக்கு அதிக அதிகாரமளித்தல், ‘மேக் இன் இந்தியா திட்டம்’, சுற்றுலா, மின்மயமாக்கல், சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பு மற்றும் பகிர்மானம், இலவச எல்.இ.டி. பல்புகள் வழங்கும் திட்டம் மற்றும் பல்வேறு துறைகள் சார்ந்த வளர்ச்சி தொடர்பான தகவல்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.
கடந்த 2013-14-ம் ஆண்டுவாக்கில் ரூ.11,198 ஆக இருந்த நாட்டின் தொழில் முதலீடு தற்போது ரூ. ஒரு லட்சத்து 43 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இதேபோல், கடந்த 2013-14-ம் ஆண்டுவாக்கில் நாடு முழுவதும் 358 கிலோமீட்டர் நீளத்துக்கு ஆப்டிக்கல் ஃபைபர் நெட் ஒர்க் இணைப்புகள் பதிக்கப்பட்டிருந்ததாகவும், ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தின்கீழ் தற்போது 2 லட்சத்து 5 ஆயிரத்து 404 கிலோ மீட்டர் நீளத்துக்கு இந்த இணைப்புகள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்பாக மக்களின் கருத்துகளை அறிய வெளியிடப்பட்டுள்ள ‘நரேந்திர மோடி ஆப்’ மூலம் பொதுமக்கள் தொடர்பு கொண்டு இந்த ஆட்சியைப் பற்றிய கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.