திருவண்ணாமலை மாவட்டம் சிவப்பு மண்டலமாக மாறும் அபாயம்- கலெக்டர் தகவல்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் 15 பேர் கொரோனா தொற்று அறிகுறியுடன் சிகிச்சை பெற்றனர். இதில் 10 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ள 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
துரிஞ்சாபுரம் அடுத்த வள்ளிவாகை புதூர் கிராமத்தை சேர்ந்த காய்கறி வியாபாரி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் .
இவர் தனது கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து காய்கறிகளை மொத்தமாக கொள்முதல் செய்து சரக்கு வாகனம் மூலம் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 30-ந் தேதி சென்னையில் இருந்து தனது வீட்டிற்கு வந்த அவருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதுபற்றி அவரது குடும்பத்தினர் மருத்துவ குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் மருத்துவ குழுவினர் வள்ளி வாகை புதூர் கிராமத்திற்குச் சென்று காய்கறி வியாபாரியை பரிசோதனை செய்தனர். அதில் அவருக்கு கொரோனா தொற்று அறிகுறி தென்பட்டதால் நேற்று முன்தினம் இரவு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரி சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது சளி மற்றும் ரத்த மாதிரியை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதைத் தொடர்ந்து வள்ளிவாகை புதூர் கிராமத்தில் காய்கறி வியாபாரி வசித்து வந்த வீடு மற்றும் கிராமம் முழுவதும் கிருமிநாசினி அடிக்கப்பட்டது.
காய்கறி வியாபாரி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உட்பட அவர்களது வீட்டிற்கு அருகில் வசிக்கும் 20-க்கும் மேற்பட்ட நபர்களின் ரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
காய்கறி வியாபாரி குடும்பத்தினரையும் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கட்டாயம் பட்டு அருகில் மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 2 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் கலெக்டர் கந்தசாமி வெளியிட்டுள்ள விழிப்புணர்வு ஆடியோவில் கூறியிருப்பதாவது:-
தற்போது திருவண்ணாமலை மாவட்டம் ஆரஞ்சு மண்டலமாக உள்ளது. கிராமங்களுக்கு வந்தவர்களை பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் வருவாய் துறையினர் தீவிரமாக விசாரித்து அவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னையில் இருந்து வந்துள்ளவர்களை முகாமுக்கு அழைத்து சென்று தனிமைப்படுத்தி வைக்க வேண்டும். மருத்துவ பரிசோதனையில் தான் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று இருக்கிறது என்பது தெரியும்.
100-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று இருக்குமோ? என்று அச்சமாக உள்ளது. இது நமக்கு விடப்பட்ட பெரிய சவால். நாம் சிவப்பு மண்டலத்துக்கு சென்று விடுவோமோ? என்று வேதனையாக உள்ளது.
எனவே மாவட்ட எல்லைகளை தீவிரமாக கண்காணியுங்கள். எல்லைகளை பூட்டுங்கள். தேவை என்றால் புது செக்போஸ்ட் அமையுங்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

