ஆந்திராவில் உயிர் இழந்த தமிழர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் - முதல்வர் உத்தரவு

ஆந்திராவில் உயிர் இழந்த தமிழர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும், ஆந்திரா சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் உயிர் இழந்த தமிழர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் - முதல்வர் உத்தரவு
Published on

சென்னை:

இது குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

ஆந்திரா மாநிலம், கடப்பா மாவட்டம், ஒண்டமேட்டா வனப்பகுதியில் உள்ள ஏரி ஒன்றில், சேலம் மாவட்டம், கரியகோவில் சரகம், அடியனூர் கிராமம், கீரங்காட்டைச் சேர்ந்த கருப்பண்ணன், ஜெயராஜ், சின்னபையன், சின்னதம்பி மகன் முருகேசன் மற்றும் அண்ணாமலை மகன் முருகேசன் ஆகிய ஐந்து நபர்களின் சடலங்கள் ஆந்திரா மாநில காவல் துறையினரால் கண்டெடுக்கப்பட்டது என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த ஐந்து நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த ஐந்து நபர்களின் உடல்களை தமிழ்நாடு அரசின் சார்பில் அவர்களின் சொந்த ஊர்களுக்கு கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளை செய்யவும், இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளவும் காவல் துறையினருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.

இறந்தவர்களின் உடல்களை அடையாளம் கண்டு பிரேத பரிசோதனை முடிப்பதற்காக கடப்பா ரிம்ஸ் அரசு மருத்துவமனைக்கு சேலம் மாவட்ட காவல் துறை ஆய்வாளர் தலைமையில் தனிப்படை ஒன்று ஆந்திரா மாநிலத்திற்கு உடனடியாக செல்லும்படி உத்தரவிட்டுள்ளேன்.

இந்த துயரச் சம்பவத்தின் தன்மையையும், இறந்தவர்களின் குடும்ப வறிய நிலையையும் கருத்தில் கொண்டு, சிறப்பினமாக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 3 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அந்த உத்தரவில் அவர் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com