

போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்படும் நிதி நெருக்கடியை குறைக்கவும், பெட்ரோல்-டீசல் விலை உயர்வு போன்ற பல்வேறு காரணங்களை கருத்தில் கொண்டும் மின்சார பஸ்களை இயக்க தமிழக அரசு முடிவு செய்தது.
இதற்கான செலவு மிகவும் குறைவு என்பதாலும், சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கும் நோக்கத்திலும் மின்சார பஸ்களை சென்னையில் இயக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்காக அசோக் லேலண்ட் நிறுவனத்தினர் 2 மின்சார பஸ்களை மாநகர போக்குவரத்து கழகத்துக்கு தயாரித்து கொடுத்துள்ளனர்.
54 பயணிகள் பயணம் செய்யும் வகையில் குளு குளு வசதியுடன் வடிவமைக்கப்பட்ட இந்த மின்சார பஸ்கள் இன்று தலைமை செயலகத்துக்கு கொண்டு வரப்பட்டன.
இந்த பஸ்களை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடி அசைத்து அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த பஸ்சில் 32 பேர் அமரும் வகையிலும், 22 பேர் நின்று கொண்டு பயணம் செய்யலாம். மின்சார பஸ்களுக்கு பல்லவன் இல்லத்தில் ரீசார்ஜ் செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது.
4 மணி நேரம் ரீசார்ஜ் செய்தால் 320 கிலோ மீட்டர் வரை பயணம் செய்யலாம்.
முதல் கட்டமாக திருவான்மியூரில் இருந்து சென்ட்ரல் வரையிலும், கோயம்பேட்டில் இருந்து பாரிமுனை வரையிலும் மின்சார பஸ்களை இயக்க உள்ளனர்.