தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

“இந்தியாவிலேயே தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது” என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
Published on

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் நபார்டு, கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் பள்ளிபாளையம்-ஈரோடு இடையே காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.30 கோடியே 3 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி தலைமை தாங்கினார். தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு, புதிதாக கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தினை திறந்து வைத்தும், வருவாய்த்துறையின் சார்பில் 317 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 1 லட்சம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த ஆட்சி அம்மாவின் ஆட்சி. மக்களின் தேவைகளை உணர்ந்து திட்டங்களை செயலாற்றி வருகிறோம். ஆனால், எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். ஒரு பொய்யை திரும்ப, திரும்ப சொன்னால் அது உண்மையாகாது. அதை மக்கள் உண்மை என எண்ணுவார்கள் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அது நிச்சயம் நடக்காது.

நாங்களே திட்டங்களை அறிவித்து, அவற்றை முடித்து, திறந்து வைத்தும் வருகிறோம். இதை அ.தி.மு.க. ஆட்சியில் மட்டுமே பார்க்க முடியும். அந்த வகையில்தான் இந்த பாலத்திற்கு அடிக்கல் நாட்டினோம். தற்போது திறந்து வைத்துள்ளோம்.

திட்டமிட்டு ஊடகங்களிலும், மேடைகளிலும் இந்த ஆட்சி செயலற்ற ஆட்சி என சொல்லி வருகிறார்கள். நாங்கள் சொல்கிறோம், இந்த ஆட்சி அம்மாவின் ஆட்சி. செயல்படும் ஆட்சி என்பதை நிரூபித்து வருகிறோம். வேண்டுமென்றே திட்டமிட்டு இந்த ஆட்சி மீது ஏதாவது குறை கண்டுபிடித்து போராட்டங்களை உருவாக்கி, கெட்டபெயரை ஏற்படுத்தவேண்டும் என எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு செயலாற்றி வருகின்றனர்.

மக்களின் தேவையை அறிந்து, அம்மா விட்டுச்சென்ற பணியை செய்து வருகிறோம். ஆனால், எதிர்க்கட்சியினர் இந்த ஆட்சி கலைக்கப்பட வேண்டும். சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து போய்விட்டது என்கிறார்கள். இந்தியாவிலேயே அமைதி பூங்காவாக தமிழகம் திகழ்கிறது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டுப்பாருங்கள் தெரியும். ஏற்கனவே எதிர்க்கட்சியினர் சில புள்ளி விவரங்களை தெரிவித்தார்கள். அவர்களுக்கு நாங்கள் சட்டசபையில் தகுந்த பதிலளித்துள்ளோம். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பேணி பாதுகாக்கப்படுகிறது. எதிர்க்கட்சியினர் பூதக்கண்ணாடி வைத்து குறைகளை தேடி வருகிறார்கள். ஆனால் எதையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

மறைந்த ஜெயலலிதா ஆசியோடு தமிழகம் செழிக்கும். எத்தனை எதிர்க்கட்சிகள் நினைத்தாலும் அம்மாவின் ஆட்சியை வீழ்த்தவோ, அசைக்கவோ முடியாது.

டெங்கு காய்ச்சல் பக்கத்து மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு பரவி உள்ளது. டெங்கு காய்ச்சலை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். காய்ச்சல் வந்தால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும். மருந்து கடைகளில் மாத்திரைகளை வாங்கி சாப்பிடக்கூடாது. இந்த அரசு டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த ரூ.23½ கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதன்மூலம் ரத்த பரிசோதனை செய்ய 834 கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் ½ நிமிடத்தில் என்ன காய்ச்சல் என கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கமுடியும். இதுதவிர மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நிலவேம்பு கசாயமும் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com