

சென்னை:
திருவொற்றியூர் மாட்டு மந்தை மேம்பால திறப்பு விழாவில் பங்கேற்ற முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
கேள்வி:- அ.தி.மு.க. இரு அணிகள் இணைப்பு பணிகள் எந்த அளவில் உள்ளது?
பதில்:- இணைப்பு நடைபெறும் என்று நம்புகிறேன்.
கேள்வி:- நீட் நுழைவுத் தேர்வில் இருந்து விலக்கு கேட்டிருக்கிறீர்களே. இன்னும் அதில் சாதகமான முடிவு வரவில்லையே?
பதில்:- நாங்கள் தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். மாணவர் நலன் கருதி நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்குமாறு பிரதமரிடம் இந்த அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
கேள்வி:- இதில் தமிழக அரசின் சார்பில் அவசர சட்டம் பிறப்பிக்கப்படுமா?
பதில்:- நான் பலமுறை சொல்லி விட்டேன். தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருக்கிறோம்.
கேள்வி:- மத்திய அரசிடம் இருந்து எத்தனை நாளில் சாதகமான பதில் வரும்?
பதில்:- இது தொடர்பாக நீதிமன்றம் ஏற்கனவே ஒரு தீர்ப்பு வழங்கி உள்ளது. அதை கவனமாக எடுத்துக் கொண்டு எந்தவித சட்ட சிக்கலும் வராத அளவுக்கு இதில் முடிவுகள் எடுக்கப் படும்.
கேள்வி:- நீட் நுழைவுத் தேர்வில் தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வர முடிவெடுத்து விட்டதா?
பதில்:- நான் திரும்ப திரும்ப சொல்கிறேன். தமிழக அரசை பொறுத்தவரை மாணவர்கள் நலன் கருதி நீட் நுழைவுத் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதுதான் நமது நிலைப்பாடு. அதற்காக தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
கேள்வி:- நீட் நுழைவுத் தேர்வில் அ.தி.மு.க. அரசு இரட்டை வேடம் போடுவதாக தி.மு.க. குற்றம் சாட்டி உள்ளதே?
பதில்:- அப்படி ஒன்றும் இல்லை. மாநில அரசை பொறுத்தவரை தமிழக மாணவர்கள் நலம் பாதிக்காத வகையில் கவனத்தோடு இந்த அரசு செயல்படுகிறது. அதற்காகத்தான் நானும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களும் எங்களது அமைச்சர்களும் மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.