தடையை மீறி பேனர் வைத்த வழக்கு - அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

தடையை மீறி பேனர் வைத்து தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு ஐகோர்ட் நோட்டீஸ் விடுத்துள்ளது. #BanOnBanners #TN #DMK #ADMK #HighCourt
தடையை மீறி பேனர் வைத்த வழக்கு - அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
Published on

சென்னை:

தமிழகம் முழுவதும் விதிமுறைகளை மீறி விளம்பர பேனர்கள் வைக்கப்படுவதாக கூறி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். விதிமுறைகளை மீறி வைக்கப்பட்ட பேனர்களை அகற்றாமல் காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அலட்சியமாக செயல்படுவதாக குற்றம்சாட்டி கூடுதல் மனுக்களையும்  தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், பேனர் விவகாரத்தில் பிறப்பித்த உத்தரவுகளை அதிகாரிகள் மதிப்பதில்லை என கண்டனம் தெரிவித்தனர். மேலும், பேனர் வைத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாவிட்டால் அரசு வேலையை ராஜினாமா செய்துவிட்டு விருப்பப்பட்ட கட்சியில் இணைய வேண்டியதுதானே என்றும் கேள்வி எழுப்பினர்.

இதனையடுத்து சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விதிகளை மீறி பேனர் வைத்தால் ஒரு வருடம் சிறை அல்லது 5000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் அறிவித்தார். 

இதற்கிடையே, பேனர் தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழகம் முழுவதும் சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்க தடை விதித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். 

இந்நிலையில், தடையை மீறி பேனர் வைத்ததாக தொடரப்பட்ட வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அப்போது, அ.தி.மு.க, தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் விடுத்தது.

இதுதொடர்பாக, தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், மாநகராட்சி ஆணையர் மற்றும் காவல் ஆணையர் ஆகியோர் பிப்ரவரி 13ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். #BanOnBanners #TN #DMK #ADMK #HighCourt

X

Maalai Malar
www.maalaimalar.com