கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி அளித்தது சென்னை ஐகோர்ட்

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சிக்கியுள்ள கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்வதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி அளித்தது சென்னை ஐகோர்ட்
Published on

சென்னை:

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் அந்நிய முதலீடு பெற அனுமதி வழங்கிய விவகாரத்தில், சட்டவிரோதமாக பணம் கைமாறியதாக கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. குற்றம்சாட்டியுள்ளது. அவரை தேடப்படும் நபராக அறிவித்து லுக் அவுட் நோட்டீசும் வெளியிட்டது. இதனால் அவர் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

எனவே, லுக் அவுட் நோட்டீசை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார்.  அந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சமீபத்தில் மாற்றப்ப்டடது.

இதற்கிடையே தொழில் விஷயமாக வெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்தார். இவ்வழக்கின் விசாரணையின்போது, கார்த்தி வெளிநாடு செல்வதற்கு சி.பி.ஐ. தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. விசாரணைக்கு ஆஜராகாததால் வெளிநாடு செல்ல அனுமதிக்கக்கூடாது என்றும், வெளிநாடு சென்றால் சாட்சிகளை அழித்துவிடுவார் என்றும் கூறியது.

இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இன்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். அப்போது, கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்வதற்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தனர். வழக்கு உள்ளது என்பதற்காக கார்த்தியின் உரிமையை பறிக்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

நாளை முதல் பிப்ரவரி 28-ம் தேதி வரையிலான கார்த்தி சிதம்பரத்தின் பயணத்திட்டத்திற்கு அனுமதி அளித்த நீதிபதிகள், இந்த பயணத்திட்டம் தொடர்பான முழு  தகவல்களையும் சி.பி.ஐ.க்கு முன்கூட்டியே அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

‘பயணப்பட்டியல், செல்லுமிடம், தங்குமிடம் ஆகியவற்றை சி.பி.ஐ.க்கு அளிக்க வேண்டும். வெளிநாட்டு நிறுவனங்களுடன் கார்த்திக்கு உள்ள தொடர்புகளை மாற்றி அமைக்கக் கூடாது. வெளிநாடுகளில் உள்ள அவரது வங்கி கணக்குகள் எதுவும் மூடப்படாது என்பதை உறுதி செய்ய வேண்டும்’ என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேசமயம், லுக் அவுட் நோட்டீசை ரத்து செய்யக்கோரி கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த பிரதான வழக்கின் விசாரணை மார்ச் 12-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com