வரலாறு தெரியாமல் உளறாதீர்கள்- விஜயகாந்த்துக்கு சந்திரசேகர் கண்டனம்

ஸ்டாலின் பெயரை பயன்படுத்தி, இழந்த அரசியல் மார்க்கெட்டை பிடிக்க நினைத்து வரலாறு தெரியாமல் உளற வேண்டாம் என விஜயகாந்த்துக்கு சந்திரசேகர் கண்டனம் தெரிவித்துள்ளார். #Vijayakanth #MKStalin #Vagaichandrasekar
வரலாறு தெரியாமல் உளறாதீர்கள்- விஜயகாந்த்துக்கு சந்திரசேகர் கண்டனம்
Published on

தி.மு.க. எம்.எல்.ஏ. நடிகர் வாகை சந்திரசேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தலைவர் கலைஞரை பார்க்கவிடாமல் என்னைத் தடுத்தார் மு.க.ஸ்டாலின் என்ற அபாண்டமான பழியை, பச்சை பொய்யை ஒரு ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார்.

நடிகர் விஜயகாந்த் இந்த பேட்டி உங்கள் வாயால் கூறப்பட்டதா ? அல்லது வேறு ஒருவருடைய காழ்ப்புணர்ச்சியின் வெறி உங்கள் வாயிலாக வெளிப்பட்டதா? விஜயகாந்த் அவர்களே உங்கள் இயலாமையைப் பயன்படுத்தி தளபதி மேல் உள்ள காழ்ப்புணர்ச்சியை வெறுப்பை நெருப்பாய் கக்கியது யார்?

கலைஞரை பார்க்கவிடாமல் மு.க.ஸ்டாலின் தடுத்தார் என நா கூசாமல் பேசி உள்ளீர்களே!

தலைவர் கலைஞரை சந்திக்க எத்தனையோ பேர் காத்திருந்தாலும் நீங்கள் வந்திருப்பதை அறிந்ததும் மு.க.ஸ்டாலின் உடனே தலைவரிடம் சென்று “விஜி வந்திருக்கிறார்” என்று எத்தனையோ தலைவர்கள், அறிஞர் பெருமக்கள் போன்றோரை தாண்டி உங்களை தலைவர் கலைஞரிடம் பேச வைத்து, வாசல் வரை வந்து, உங்களை வழி அனுப்பி வைத்த காட்சியை உங்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.


விஜயகாந்த் “என்னுடைய மனசாட்சி ஸ்டாலினை எப்போதும் ஏற்றுக் கொண்டதில்லை” என்று கூறியுள்ளீர்கள். தமிழ்நாட்டு மக்களின் மனசாட்சியில் நீங்கள் படுகுழியில் தள்ளப்பட்ட பாவப்பட்ட ஜென்மமாய் இருக்கிறீர்கள். விஜயகாந்த், மு.க.ஸ்டாலின் எப்போதும் உங்களை விரும்பியதும் இல்லை, வெறுத்ததும் இல்லை. அவரின் பொது வாழ்வின் அரசியல் பயணத்தில் புலிகளையும் புல்லுருவிகளையும் கடந்து செல்கிறார். அரவுகளையும் கயிற்றரவுகளையும் கடந்து செல்லும் மக்கள் தொண்டர் எங்கள் தளபதி.

காவிரி பிரச்சனை தொடர்பாக தி.மு.க கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில் ஏன் பங்கேற்கவில்லை? என்ற கேள்விக்கு விஜயகாந்த் “ஸ்டாலினை துதி பாடுவதை தவிர வேறு எதுவும் அங்கே நடக்க போவதில்லை. அவர் என்ன கருணாநிதியா? ஸ்டாலின் வேண்டுமானால் தன்னை கருணாநிதி என்று நினைத்துக் கொள்ளலாம் ஆனால் அது உண்மை அல்ல” என்று உளறிக்கொட்டியுள்ளார்.

ஆனால் எங்கள் செயல் தலைவர் தளபதிக்கு புகழ்ச்சி என்பது பிடிக்காத ஒன்று.

“அப்பனைப் போலவே மகனும் எடுத்த காரியத்தை முடிப்பதில் அடம்பிடிக்கிறான்” என்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே பேரறிஞர் அண்ணாவால் பாரட்டப்பட்டவர் மு.க. ஸ்டாலின். வரலாறு தெரியாமல் உளறாதீர்கள்.

விஜயகாந்த்! நீங்கள் ஆரம்ப காலங்களில் மேடையில் பேசும்போது கலைஞரின் வைர வரிகளான "வீழ்வது நாமாக இருந்தாலும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்" என பேசி கைதட்டல் பெறுவீர்கள்.

கலைஞருக்கே பிடித்த வரிகளை உங்களுக்கு நினைவு படுத்துகிறேன் "மனசாட்சி தூங்கும் போது மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்பிவிடும்".

விஜயகாந்த் உங்கள் இயலாமையை உங்கள் குடும்பத்தாரே பயன்படுத்தி உங்களுக்கே உலை வைக்கும் விசித்திரத்தை பார்க்கிறோம்.

சினிமாவில் கதாநாயகனுக்கு மார்க்கெட் போனால் மார்க்கெட்டில் உள்ள கதாநாயகியையும், இசை அமைப்பாளரையும், இயக்குநரையும் இணைத்து மீண்டும் வெற்றி பெறுவது சினிமா பாணி...

அதைப்போலவே, அரசியலில் மார்க்கெட் போகாமல் இருக்க மக்களின் மனதில் நிலைத்திருக்கும் தளபதி பெயரை பயன்படுத்தி இழந்த அரசியல் மார்க்கெட்டை பிடிக்க நினைக்காதீர்கள். சினிமா வேறு அரசியல் வேறு. வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com