மத்திய அரசு திட்டங்களை, சலுகைகளை வழங்கி தமிழக மக்களை கவர பா.ஜ.க. வியூகம்

மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி தமிழக மக்களை கவருவதற்கு பா.ஜனதா அதிரடி வியூகம் வகுத்துள்ளது. அத்துடன், பொதுமக்கள் தொடர்பு கொள்ளும் வகையில் தொலைபேசி எண்களை அறிவித்து பிரச்சாரம் செய்ய உள்ளனர்.
மத்திய அரசு திட்டங்களை, சலுகைகளை வழங்கி தமிழக மக்களை கவர பா.ஜ.க. வியூகம்
Published on

சென்னை:

வடமாநிலங்களில் பா.ஜனதா வலுவாக உள்ளது. ஆனால் தமிழகத்தில் எதிர்பார்த்த அளவுக்கு வளர்ச்சி அடைய வில்லை. நாடு முழுவதும் மோடி அலை வீசியபோதும், தமிழகத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

இதற்கான காரணங்களை டெல்லி மேலிடம் ஆய்வு செய்தது. தமிழதக்தில் பா.ஜனதாவை வளர்க்க பல்வேறு திட்டங்களை தயாரித்துள்ளனர்.

சமீபத்தில் நடந்த பா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டத்தில் ஒடிசா, தெலுங்கானா, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் பா.ஜனதாவை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. அப்போது ஒவ்வொரு மாநிலத்திலும் செயல்படுத்தப்பட வேண்டிய கட்சிப்பணிகள் வரையறுக்கப்பட்டன.

மத்திய அரசு முத்ராவங்கி திட்டம், செல்வமகள் திட்டம், கழிப்பறை கட்டிக் கொடுக்கும் திட்டம், ரூ.12-ல் ஆயுள் காப்பீடு, பெண்களுக்கு இலவச எரிவாயு, வீடு கட்ட ரூ.2½ லட்சம் இலவசம் என்று பல சலுகை திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.

இந்த திட்டங்கள் பற்றி பலருக்கு தெரியவில்லை. எனவே மத்திய அரசு திட்டங்களையும், சலுகைகளையும் மக்களிடம் நேரடியாக கொண்டு சேர்ப்பதில் கட்சியினர் தீவிரமாக செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக 1,130 மண்டல தலைவர்களையும், மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். இன்று கிருஷ்ணகிரியில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

ஒவ்வொரு பகுதியிலும் கட்சி நிர்வாகி ஒருவரை பொறுப்பாளராக நியமித்துள்ளனர். அவரது தொலைபேசி எண்ணுடன் தெருக்கள், மெயின்ரோடுகளில் விளம்பர பேனர்கள் வைக்கப்படுகின்றன. அதில் ‘மத்திய அரசின் திட்டங்கள், சலுகைகள் பற்றி அறிய, உதவி பெற இந்த போனில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் அணுகினால் அவர்களுக்கு கட்சியினர் உதவி செய்து மத்திய அரசின் திட்ட பலன்கள் கிடைக்க செய்வார்கள். இதன்மூலம் சாதாரண மக்கள் வரை அனைவரையும் கவர முடியும் என்று திட்ட மிட்டுள்ளனர்.

இதுதவிர மாநில அளவிலான ஒரு தொலைபேசி எண்ணும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அந்த எண்ணிலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். இதுபற்றி சென்னை தலைமை அலுவலகத்தில் செயல்படும் குழு தகவல் சேகரித்து சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் மூலம் நேரடியாக தொடர்பு கொண்டு உதவி செய்யப்படும். இதன்மூலம் அடித்தட்டு மக்களை கவர முடியும் என்று பா.ஜனதா நம்புகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com