

புதுடெல்லி:
மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு ‘ஆதார்’ எண் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு வருமான வரித்துறையால் நிரந்தர கணக்கு எண் (பான்) அளிக்கப்படுகிறது.
அந்த பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. மேலும் வங்கி கணக்கு எண், செல்போன் எண் போன்றவற்றுடனும் ஆதாரை இணைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஆதார் பற்றிய மத்திய அரசின் முடிவுக்கு எதிராக பல்வேறு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
இந்த வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது. இந்த நிலையில் ஆதாருக்கு எதிரான வழக்கு ஒன்றின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது. ஆதார் விவகாரத்தில் மத்திய அரசின் முடிவுக்கு இடைக்கால தடை உத்தரவை பிறப்பிக்குமாறு மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டது.
இதற்கு மறுப்பு தெரிவித்த சுப்ரீம் கோர்ட்டு, இந்த விவகாரத்தில் அரசியல் சாசன அமர்வுதான் இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கும் என்றது. மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களில் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடுவை அடுத்த ஆண்டு மார்ச் 31–ந்தேதி வரை நீட்டிக்க தயாராக இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தது.
டெல்லி மாநிலம் அல்ல என்றும், அங்கு துணைநிலை கவர்னருக்கே அதிகாரம் என்றும் ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை முடித்தபின் ஆதார் தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.