புதுவை சட்டசபையை பா.ஜ.க.வினர் முற்றுகை: நாராயணசாமி - வைத்திலிங்கம் உருவ பொம்மை எரிப்பு

புதுவையில் 3 நியமன எம்.எல்.ஏ.க்களின் பதவி பிரமாணத்தை சபாநாயகர் ஏற்க மறுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையை பா.ஜ.க.வினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
புதுவை சட்டசபையை பா.ஜ.க.வினர் முற்றுகை: நாராயணசாமி - வைத்திலிங்கம் உருவ பொம்மை எரிப்பு
Published on

புதுவையில் மாநில அரசு பரிந்துரை இல்லாமலேயே மத்திய அரசு தன்னிச்சையாக பா.ஜனதா நிர்வாகிகள் 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்தது. இது புதுவையில் பூதாகரமான பிரச்சினையாக வெடித்துள்ளது.

இந்த 3 நியமன எம்.எல்.ஏ.க்களுக்கும் 4-ந்தேதி இரவோடு இரவாக கவர்னர் கிரண்பேடி பதவிப்பிரமாணமும் செய்து வைத்தார். இதையடுத்து சட்டமன்றத்தில் இருக்கை, அலுவலகம் ஒதுக்கித்தந்து பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களாக தங்களை அங்கீகரிக்க வேண்டும் என நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் கடிதம் கொடுத்திருந்தனர்.

அதேபோல கவர்னரும் தான் பதவி பிரமாணம் செய்து வைத்த விபரத்தை தெரிவித்து 3 எம்.எல்.ஏ.க்களையும் அங்கீகரிக்கும்படி சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

ஆனால், சபாநாயகர் வைத்திலிங்கம் தனக்கு அதிகாரம் பெற்ற நபரிடமிருந்து நியமன எம்.எல்.ஏ. தொடர்பாக எந்த உத்தரவும் வரவில்லை என்றும், கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தது செல்லாது என்றும் கூறி கவர்னரின் கடிதத்தை திருப்பி அனுப்பினார். இதனால் நியமன எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்திற்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பா.ஜனதா மாநில தலைவரும், நியமன எம்.எல்.ஏ.வுமான சாமிநாதன், பா.ஜனதா கட்சியினர் சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவார்கள் என அறிவித்திருந்தார்.

புதுவை நகர பகுதியில் பெரியகடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இன்று முதல் 20-ந்தேதி வரை போராட்டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம் என எந்த போராட்டமும் நடத்தக்கூடாது என சீனியர் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

இந்த தடையை மீறி பா.ஜனதாவினர் நேருவீதி, மி‌ஷன் வீதி சந்திப்பில் திரண்டனர். அங்கிருந்து பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் பா.ஜனதாவினர் சட்டமன்றம் நோக்கி ஊர்வலமாக வந்தனர். ஊர்வலம் மி‌ஷன்வீதி, மாதாகோவில் வீதி வழியாக வந்தது.

ஊர்வலத்தை ஆம்பூர் சாலையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். அங்கு பா.ஜனதாவினர் முதல்-அமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் வைத்திலிங்கம் மற்றும் காங்கிரஸ் அரசை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினர். போலீசார் வைத்திருந்த தடுப்புகளின் மீது ஏறி நின்று பா.ஜனதாவினர் கோ‌ஷம் எழுப்பினர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அப்போது சிலர் நாராயணசாமி, சபாநாயகர் வைத்திலிங்கம் உருவ பொம்மைகளை ரோட்டில் போட்டு எரித்தனர். போலீசார் அவற்றை பறிக்க முயன்றனர். ஆனால், அது முழுமையாக எரிந்து சாம்பலானது.

இதையடுத்து போராட்டம் நடத்திய 60 பெண்கள் உள்ளிட்ட 150 பா.ஜனதாவினரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com