

பாட்னா:
பீகார் மாநிலத்தில் லல்லு பிரசாத் யாதவ்வின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வந்த நிதிஷ் குமார், திடீரென அக்கூட்டணியில் இருந்து விலகி பா.ஜ.க.வுடன் கைகோர்த்து ஆட்சியமைத்தார். மேலும், லல்லு பிரசாத் யாதவ்வின் குடும்பத்தினர் மீது சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை சமீபத்தில் அதிரடி சோதனைகள் நடத்தியது.
இதனால், பா.ஜ.க மீது ஆத்திரமடைந்துள்ள லல்லு பிரசாத் யாதவ், இன்று பா.ஜ.க.விடம் இருந்து இந்தியாவை காப்போம் என்ற பெயரில் மெகா பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தினார். இதில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்காத 17 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
பாட்னா நகரில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், காங்கிரஸ் சார்பில் குலாம் நபி ஆசாத் பேரணியில் பங்கேற்றார்.
மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாடி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பொதுச்செயலாளர் சரத் யாதவ் ஆகியோர் பங்கேற்றனர்.
பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் அனைவரும் பா.ஜ.க.வை கடுமையாக விமர்சித்து பேசினர். இந்த கூட்டம் நடைபெற்ற மைதானம் முழுவதும் மக்களால் நிரம்பி வழிந்தது. மைதானம் மட்டுமல்லாமல், வெளியே உள்ள சாலைகளிலும் திரளானோர் கலந்து கொண்டனர். இதனால், அம்மாநில பா.ஜ.க அதிர்ச்சி அடைந்துள்ளது.
2019-ம் ஆண்டில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு பா.ஜ.க எதிர்ப்பு வாக்குகளை ஒன்றிணைக்கும் விதமாக இந்த பேரணி நடைபெற்றுள்ளதாகவும், இதில் பங்கேற்றுள்ள அனைத்து கட்சிகளும் ஒரே கூட்டணியாக உருமாற வாய்ப்புள்ளதாகவும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.