

ராஜஸ்தான் மாநில பாஜக தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான மதன் லால் சைனி (வயது 75), நுரையீரல் தொற்று காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததால், தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை அவர் உயிரிழந்தார்.
இந்நிலையில், பாராளுமன்ற கூட்டத்தொடர் குறித்து விவாதிப்பதற்காக பிரதமர் மோடி தலைமையில், பாஜக பாராளுமன்ற குழு கூட்டம் இன்று காலை நடைபெறுவதாக இருந்தது. ஆனால், ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் மறைந்ததால், கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எப்போது கூட்டம் நடைபெறும் என்பது அறிவிக்கப்படவில்லை.