

சென்னை:
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 149-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் அவரது உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், நடிகர் ராதாரவி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு வ.உ.சி.யின் படத்துக்கு மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், அதிமுக - பாஜக கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசக் கூடாது என பா.ஜ.கவினர் அமைச்சர்களுக்கு கட்டளையிடவில்லை என தெரிவித்தார். கூட்டணி தொடர்பாக பொதுவெளியில் யாரும் பேசக் கூடாது என்று அதிமுக தலைமை தான் கட்டளை இட்டுள்ளதாக சுட்டிக் காட்டினார்.
கூட்டணி தொடர்பாக இரு கட்சியின் தலைவர்களும் பேசிக் கொள்வதே சரி என்றும், கூட்டணி தொடர்பான அமைச்சர்களின் கருத்துக்களை பொருட்படுத்துவதில்லை என்றும் தெரிவித்தார்.
‘நடிகர் ரஜினிகாந்த் ஒரு தனி மனிதர் என்பதால், அவர் யாரை வேண்டுமானாலும் வாழ்த்தலாம். அரசியல் தலைவராக ரஜினி மாறினாலும், பிறரை வாழ்த்துவதில் தவறில்லை. கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட நயினார் நாகேந்திரன் விருப்பம் தெரிவித்துள்ளார். வேட்பாளர் யார் என்பது குறித்து விரைவில் கட்சி அறிவிக்கும்’ என்றும் நாகராஜன் தெரிவித்தார்.
கூட்டணி குறித்து அமைச்சர்கள் பேசக்கூடாது என பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் எங்களுக்கு கட்டளையிட முடியாது என்றும், ஆரோக்கியமற்ற கருத்துக்களைத் தெரிவிக்கும்போதுதான் விமர்சனத்திற்கு தள்ளப்படுவதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறிய நிலையில், கரு.நாகராஜன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.