மாட்டிறைச்சி பிரச்சினையில் மதத்தின் பெயரால் மக்களை மத்திய அரசு திசை திருப்புகிறது: நல்லக்கண்ணு பேட்டி

மாட்டு இறைச்சி பிரச்சினையில் மதத்தின் பெயரால் மக்களை மத்திய அரசு திசை திருப்பி வருவதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு கூறியுள்ளார்.
மாட்டிறைச்சி பிரச்சினையில் மதத்தின் பெயரால் மக்களை மத்திய அரசு திசை திருப்புகிறது: நல்லக்கண்ணு பேட்டி
Published on

கன்னியாகுமரி:

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு கன்னியாகுமரியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் இன்று நெருக்கடியான அரசியல் சூழ்நிலை நிலவுகிறது. மத்திய பாரதிய ஜனதா ஆட்சி இதை சாதகமாக பயன்படுத்தி கொள்கிறது. ஜனாதிபதி தேர்தலில் அ.தி.மு.க.வின் 3 அணிகளும் போட்டிபோட்டு கொண்டு பாரதிய ஜனதாவை ஆதரிக்கிறது.

இதற்கு மத்திய அரசின் மிரட்டல் தான் காரணம். தற்போது தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் அதிகமாக உள்ளது. மத்திய அரசு காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை அமல்படுத்த நடவடிக்கை எடுக்காதது தான் இதற்கு முக்கிய காரணம்.

தமிழக, இலங்கை மீனவர் பிரச்சினையிலும் மத்திய அரசு நிரந்தர தீர்வு காணவில்லை. இதனால் இந்திய மீனவர்கள் 600 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே காவிரி பிரச்சினையில் மீனவர் பிரச்சினையில் மத்திய அரசு உடனே நிரந்தர தீர்வு காணவேண்டும்.

யார், யார் எந்த உணவு சாப்பிடவேண்டும் என்பது அவரவர் உரிமை. இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு தடை விதித்தது சரியல்ல. மாட்டிறைச்சி பிரச்சினையில் மதத்தின் பெயரால் மக்களை மத்திய அரசு திசை திருப்புகிறது.

ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை கண்டித்து நாளை நடைபெறும் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி தனது ஆதரவை தெரிவித்து கொள்கிறது.

தமிழகத்தில் ஏற்பட்ட வறட்சிக்கு மாநில அரசு ரூ.33 ஆயிரம் கோடி கேட்டது. மத்திய குழு ரூ.2500 கோடி வழங்க பரிந்துரை செய்தது. ஆனால் மத்திய அரசு ரூ.1750 கோடி மட்டும் ஒதுக்கி உள்ளது. இது ஏற்றுக்கொள்ள தக்கது அல்ல. தமிழகத்தில் நடக்கும் மணல் கொள்ளையை தடுக்க அரசு தவறி விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இந்தியாவை மீட்போம், தமிழகத்தை காப்போம் என்ற கோ‌ஷத்துடன் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து திருச்சிக்கு விழிப்புணர்வு பிரசார பயணம் தொடங்கியது. இதனை நல்லக்கண்ணு தொடங்கி வைத்தார்.

இதில் முன்னாள் எம்.பி. அப்பாதுரை, முன்னாள் எம்.எல்.ஏ, குணசேகரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாகிகள் அழகுமுத்துபாண்டியன். கண்ணகி, குமரி மாவட்ட தலைவர் இசக்கிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com