

ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் மெல்போர்னில் நேற்று தொடங்கியது. ‘பாக்சிங் டே’ டெஸ்டான இதில் நியூசிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வை செய்தது.
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஸ்டீவ் ஸ்மித் 85 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து டிராவிஸ் ஹெட் உடன் கேப்டன் டிம் பெய்ன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. டிராவிஸ் ஹெட் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். மறுமுனையில் டிம் பெய்ன் அரைசதம் அடித்தார்.
தொடர்ந்து விளையாடிய டிராவிஸ் ஹெட் 114 ரன்களிலும், டிம் பெய்ன் 79 ரன்களிலும் வெளியேற ஆஸ்திரேலியா 155.1 ஓவரில் 467 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. நியூசிலாந்து அணி சார்பில் நீல் வாக்னர் 4 விக்கெட்டும், டிம் சவுத்தி 3 விக்கெட்டும், கிராண்ட்ஹோம் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் நியூசிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. டாம் லாதம், பிளண்டல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பிளண்டல் 15 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் 9 ரன்னில் வெளியேறினார். இதனால் நியூசிலாந்து 39 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுக்களை இழந்தது.