ஜி.எஸ்.டி. வரி மேலும் குறைக்கப்படும் - நிதி மந்திரி அருண் ஜெட்லி சூசக தகவல்

ஜி.எஸ்.டி. வரி மேலும் குறைக்கப்படும் என நிதி மந்திரி அருண் ஜெட்லி சூசகமாக தெரிவித்தார். #GST #ArunJaitley
ஜி.எஸ்.டி. வரி மேலும் குறைக்கப்படும் - நிதி மந்திரி அருண் ஜெட்லி சூசக தகவல்
Published on

புதுடெல்லி:

ஜி.எஸ்.டி. வரி மேலும் குறைக்கப்படும் என நிதி மந்திரி அருண் ஜெட்லி சூசகமாக தெரிவித்தார்.

நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை உறுதி செய்யும் நோக்கில் கடந்த ஆண்டு ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்டது. இதற்காக 5, 12, 18 மற்றும் 28 சதவீத வரி விதிப்பின் கீழ் பொருட்கள் வகைப்படுத்தப்பட்டன. இந்த வரி அமலாக்கம் குறித்து விவாதிக்கவும், அது தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்கவும் ஜி.எஸ்.டி. கவுன்சிலும் அமைக்கப்பட்டது.

ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்டதால் சில பொருட்களின் விலை உயர்ந்ததை தொடர்ந்து, பல்வேறு தரப்பில் இருந்தும் புகார் எழுந்தது. எனவே கடந்த நவம்பர் மாதம் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், சில பொருட்களின் ஜி.எஸ்.டி. வரி விகிதத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி 28 சதவீத வரி விதிக்கப்பட்டு இருந்த 178 பொருட்களுக்கு 18 சதவீதமாக குறைக்கப்பட்டன. 18 சதவீத வரி விதிக்கப்பட்டு இருந்த 13 பொருட்கள் 12 சதவீதத்துக்கும், 12 சதவீதம் விதிக்கப்பட்டு இருந்த 8 பொருட்கள் 5 சதவீதத்துக்கும் மாற்றப்பட்டன.

மேலும் 18 சதவீதத்தில் இருந்த 6 பொருட்கள் 5 சதவீத வரிக்கு மாற்றப்பட்டதுடன், 5 சதவீதத்தில் இருந்த 6 பொருட்கள் பூஜ்ஜிய சதவீதத்துக்கும் குறைக்கப்பட்டன. தற்போதைய நிலையில் பாவப்பொருட்களும், ஆடம்பர பொருட்களுக்கும் மட்டுமே 28 சதவீத வரி விதிக்கப்படுகிறது.

இந்த ஜி.எஸ்.டி. வரி மேலும் குறைக்கப்படும் என நிதி மந்திரி அருண் ஜெட்லி சூசகமாக தெரிவித்துள்ளார்.

சர்வதேச சுங்க தினத்தையொட்டி டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசும்போது கூறுகையில், ‘நாட்டின் மறைமுக வரி அமைப்பை ஒட்டுமொத்தமாக மாற்றியிருக்கிறது ஜி.எஸ்.டி. வரி. பல்வேறு நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் மிகவும் குறுகிய காலகட்டத்தில் ஜி.எஸ்.டி. நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. எனவே எதிர்காலத்தில் அதன் தளத்தை விரிவுபடுத்தவும், கட்டமைப்பை ஒழுங்குபடுத்தவும் நமக்கு ஒரு வாய்ப்பை வழங்கி இருக்கிறது’ என்றார்.

இதன் மூலம் வருங்காலத்தில் ஜி.எஸ்.டி. வரி மேலும் குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.   #GST #ArunJaitley #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com