ரஜினி முதல்-அமைச்சரானால் தமிழகத்தில் மிகப்பெரிய புரட்சி ஏற்படும்: அர்ஜூன் சம்பத் பேட்டி

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தனது ரசிகர்களை ரஜினி நிறுத்த போகிறார். ரஜினி முதல்-அமைச்சரானால் தமிழகத்தில் மிகப்பெரிய புரட்சி ஏற்படும் என்று அர்ஜூன் சம்பத் கூறினார்.
ரஜினி முதல்-அமைச்சரானால் தமிழகத்தில் மிகப்பெரிய புரட்சி ஏற்படும்: அர்ஜூன் சம்பத் பேட்டி
Published on

கும்பகோணம்:

இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் கும்பகோணத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பொங்கல் பண்டிகை சமயத்தில் போராட்டம் நடை பெறுவதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இதில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வூதிய தொகை ரூ.7 ஆயிரம் கோடி வழங்கப்பட வில்லை. தி.மு.க.- அ.தி.மு.க. கட்சிகள் செய்த ஊழலால் தான் ஓய்வூதிய பணம் வழங்க முடியவில்லை. இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.

பொதுமக்களின் நலன் கருதி பஸ் ஊழியர்கள் தற்போது போராட்டத்தை கைவிட்டு விட்டு பொங்கலுக்கு பிறகு அவர்கள் போராட்டத்தை தொடர வேண்டும்.

நடிகர் ரஜினி கட்சி ஆரம்பித்து சட்டசபை தேர்தலில் 234 தொகுதி களிலும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். ரஜினியின் ஆன்மீக அரசியல் தமிழக மக்களுக்கு நன்மை செய்வதாகும். பா.ஜனதா கைக்கூலி ரஜினி என்று கூறுவது முழுக்க முழுக்க பொய்.

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தனது ரசிகர்களை ரஜினி நிறுத்த போகிறார். ரஜினி முதல்-அமைச்சரானால் தமிழகத்தில் மிகப்பெரிய புரட்சி ஏற்படும்.

கவிஞர் வைரமுத்து ஆண்டாளை பற்றி தெரிவித்த கருத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இது இந்து மக்களின் மனதை புண்படுத்துவதாக உள்ளது.

கவிஞர் வைரமுத்துவுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்த விருதை அவருக்கு வழங்கக்கூடாது.

ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு ஆகும். சில இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட நிர்வாகம், காவல் துறை கடும் கெடுபிடிகள், விதிமுறைகள் விதிக்கின்றனர். இதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக இந்து மக்கள் கட்சி சார்பில் கும்பகோணம் பாணபுரீஸ்வரர் கோவில் அருகே கலாச்சார பொங்கல் விழா நடந்தது. இதில் அர்ஜூன் சம்பத் கலந்து கொண்டு பொங்கலிட்டு விழாவை தொடங்கி வைத்தார். #rajinikanth #arjunsampath #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com