மராட்டியத்தில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி அரசு 5 ஆண்டுகள் நீடிக்கும்: அமித்ஷா நம்பிக்கை

மராட்டியத்தில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி அரசு 5 ஆண்டுகள் நீடிக்கும் என்று அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்தார்.
மராட்டியத்தில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி அரசு 5 ஆண்டுகள் நீடிக்கும்: அமித்ஷா நம்பிக்கை
Published on

பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரத்தில் மாநிலத்தில் ஆளும் பாரதிய ஜனதா- சிவசேனா கூட்டணி கட்சிகள் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடிக்கிறது.

தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான அரசு பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாவிட்டால், கூட்டணி அரசில் இருந்து சிவசேனா வெளியேறும் என்றும், அரசுக்கு அளித்த ஆதரவை திரும்ப பெற்று ஆட்சியை கவிழ்ப்போம் என்றும் அக்கட்சி பகிரங்க எச்சரிக்கை விடுத்தது. அத்துடன், சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெறும் என்றும் சிவசேனா அச்சுறுத்தியது.

இதனால், அரசியல் அரங்கில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது. இதற்கு பதிலடி கொடுத்த முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெறும் பட்சத்தில், அதனை எதிர்கொள்ள பா.ஜனதா தயார் நிலையில் இருப்பதாக குறிப்பிட்டார். இதனால், ஆளும் கூட்டணி கட்சிகள் இடையே மோதல் முற்றியது. இதுமட்டுமின்றி, ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தேர்விலும் பா.ஜனதாவுக்கு சிவசேனா அழுத்தம் கொடுத்து வருகிறது.

இந்த நிலையில், 3 நாட்கள் சுற்றுப்பயணமாக மும்பை வந்துள்ள பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ஜனாதிபதி தேர்தலுக்கு வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனின் பெயரை சிவசேனா பரிந்துரை செய்கிறதே? என்று நிருபர்கள் கேட்டதற்கு, “கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி, ஜனாதிபதி வேட்பாளர் பற்றி முடிவு எடுப்போம்” என்று அமித்ஷா பதில் அளித்தார்.

சிவசேனாவுக்கு பதிலடி கொடுக்கும் பொருட்டு, சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வந்தால், அதனை சந்திக்க பா.ஜனதா தயாராக இருப்பதாக முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தது பற்றி நிருபர்கள் கேட்டதற்கு, “முன்கூட்டியே தேர்தல் எங்கள் மீது திணிக்கப்பட்டால், அதனை எதிர்கொள்ள தயார் என்று தான் தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்” என்றார்.

மேலும், 5 ஆண்டு ஆட்சியை பா.ஜனதா தலைமையிலான அரசு முழுவதுமாக நிறைவுசெய்யும் என்று குறிப்பிட்ட அமித்ஷா, ஒருவேளை முன்கூட்டியே தேர்தல் வந்தால் அதனை எதிர்கொள்ள பா.ஜனதா தயாராக இருப்பதாகவும், அதில் வெற்றியும் பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

அத்துடன் பிரதமர் மோடியை மிகவும் பிரபலமான தலைவர் என்று வர்ணித்த அமித்ஷா, 2022-ம் ஆண்டு இந்தியா 75-வது சுதந்திர தின விழாவை கொண்டாடுவதற்குள், நாட்டை சர்வதேச சக்தியாக உருமாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் பிரதமர் மோடி மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டார். பிரதமர் அலுவலகத்திற்கான கண்ணியத்தை மோடி மீட்டெடுத்ததாகவும் அமித்ஷா பாராட்டினார்.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் சேம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுவதால், இரு நாடுகளுக்கு இடையே ஆன கிரிக்கெட் உறவு சுமுக நிலைக்கு திரும்புமா? என்று கேட்டதற்கு, “சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவும், பாகிஸ்தானும் தொடர்ந்து விளையாடும். ஆனால், பாகிஸ்தான் மண்ணில் இந்தியாவும், இந்திய மண்ணில் பாகிஸ்தானும் விளையாட மாட்டார்கள்” என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com