

திருவனந்தபுரம்:
கேரளாவில் கடந்த ஆண்டு கடுமையான வறட்சி ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் குடிநீருக்கே தவிக்கும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டு கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதனால் கேரளாவில் உள்ள அணைகள், நீர் நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்து வறட்சி நீங்கியது. கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற ஆன்மீக தலமான சபரிமலையிலும் கனமழை பெய்தது. அங்குள்ள பம்பை நதியிலும் வெள்ளம் கரை புரண்டது. சிறிது நாட்களாக மழையின் தீவிரம் குறைந்து இருந்தது.
இந்த நிலையில் கேரளாவில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கி உள்ளது. மாநில தலைநகரான திருவனந்தபுரம் மற்றும் இடுக்கி, காசர்கோடு, எர்ணாகுளம், பாலக்காடு, விதுரா ஆகிய பகுதிகளில் விடிய, விடிய மழை கொட்டித் தீர்த்தது.
அதிகபட்சமாக இடுக்கி, விதுரா மாவட்டங்களில் மழை பதிவாகி உள்ளது. கன மழை காரணமாக இடுக்கி மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
வருகிற 24-ந்தேதி வரை கேரளாவில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதைதொடர்ந்து வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்புள்ள மாவட்டங்களில் அந்தந்த கலெக்டர்கள் மழை முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணியும் நடைபெற்று வருகிறது. மேலும் அவர்களுக்கு தேவையான உணவு, மருத்துவ வசதிகளும் முன் ஏற்பாடுகளாக செய்யப்பட்டு வருகிறது.
சிறையின்கீழ், பூவார், கோவளம் போன்ற கடலோர பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள் வருகிற 24-ந்தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழையின்போது பலத்த காற்றும் வீசும் என்பதால் மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைத்துக்கொள்ளவும் அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.