கெஜ்ரிவாலிடம் ரூ.500 கோடி இழப்பீடு கேட்கும் பாரதிய ஜனதா

மனோஜ் திவாரி டான்ஸ் ஆடுவது போல போலி வீடியோ வெளியிட்டதற்காக ஆம்ஆத்மி ரூ.500 கோடி இழப்பீடு தர வேண்டும் என்று பா.ஜ.க. நோட்டீசு அனுப்பியுள்ளது.
ஜெஜ்ரிவால்
ஜெஜ்ரிவால்
Published on

புதுடெல்லி:

டெல்லி மாநில சட்ட சபைக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 8-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

ஆளும் ஆம்ஆத்மி, பாரதிய ஜனதா, காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளிடையே தேர்தலில் மும்முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் ஆம்ஆத்மி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்தது. இதையடுத்து நேற்று அமித்ஷா சுமார் 7 மணி நேரம் மராத்தான் ஆலோசனை கூட்டம் நடத்தினார். டெல்லி சட்டசபையில் உள்ள 70 இடங்களில் வேட்பாளர்களாக யார்- யாரை களம் இறக்குவது என்பது பற்றி தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது.

இந்த நிலையில் பாரதிய ஜனதா தலைவர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில் ஒரு வீடியோ தொகுப்பை ஆம்ஆத்மி வெளியிட்டது. டுவிட்டரில் வெளியான அந்த வீடியோ காட்சிகள் மற்ற சமூக வலை தளங்களிலும் பரவியது.

டெல்லி மாநில பா.ஜ.க. தலைவர் மனோஜ் திவாரி, பாடல் ஒன்றுக்கு டான்ஸ் ஆடுவது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது. ஆம்ஆத்மி கட்சியின் பிரசார பாடலுக்கு மனோஜ் திவாரி டான்ஸ் ஆடுவது போல உள்ளது. இது மனோஜ் திவாரியின் புகழை திட்டமிட்டு சீர்குலைப்பதாக இருப்பதாக பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

மனோஜ் திவாரி சில ஆண்டுகளுக்கு முன்பு போஜ்புரி ஆல்பத்துக்காக நடனம் ஆடி இருந்தார். அந்த நடன காட்சிகளில் ஆம்ஆத்மி கட்சியினர் தில்லுமுல்லு செய்து, சர்ச்சைக்குரிய வீடியோவை வெளியிட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

பாரதிய ஜனதாவின் வெற்றியைத்தடுப்பதற்காக ஆம்ஆத்மி கட்சியினர் இத்தகைய குறுக்கு வழிகளில் இறங்கி இருப்பதாக பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதில், “ஆம் ஆத்மி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு தேர்தல் நடத்தை விதி மீறலாகும். எனவே ஆம்ஆத்மி மீத உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பாடல் காட்சியை எடிட் செய்து மனோஜ் திவாரி டான்ஸ் ஆடுவது போல போலி வீடியோ வெளியிட்டதற்காக ஆம்ஆத்மி ரூ.500 கோடி இழப்பீடு தர வேண்டும் என்று பா.ஜ.க. நோட்டீசு அனுப்பியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com