விநாயகர் ஊர்வலத்தில் ‘இடி மன்னர்கள்’ - பொறிவைத்து கைது செய்த பெண் போலீசார்

ஐதராபாத் நகரில் நடைபெற்ற விநாயகர் சிலைகள் கரைப்பு ஊர்வலத்தில் சிறுமிகள், பெண்களை பாலியல்ரீதியாக துன்புறுத்திய ‘இடி மன்னர்கள்’ 30 பேரை பெண் போலீசார் கைது செய்துள்ளனர்.
விநாயகர் ஊர்வலத்தில் ‘இடி மன்னர்கள்’ - பொறிவைத்து கைது செய்த பெண் போலீசார்
Published on

ஐதராபாத்:

பரபரப்பான அலுவல் நேரங்களில் நடந்து செல்லும் பெண்களின் மார்பகங்கள் மற்றும் தோள்பட்டையில் இடிப்பதற்காகவே சில காமுகர்கள் சாலைகளில் திரிவதுண்டு. குறிப்பாக, அரசு பேருந்துகளில் கூட்டநெரிசலில் நின்றபடி பயணிக்கும் அழகிய இளம்பெண்கள் என்றால் இவர்களுக்கு அல்வா சாப்பிட்டது போன்றதொரு பரம திருப்தி.

இவர்களின் இம்சையை சகிக்க முடியாமல் மூச்சுத்திணறும் பெண்களில் சிலர் கொதித்தெழுந்து திட்டித் தீர்ப்பதுண்டு. பொறுக்கிகளுடன் நமக்கெதற்கு வம்பு? என்று பல பெண்கள் விலகிப்போய் விடுவதும் உண்டு. கோவில் திருவிழா, பரபப்பான மார்க்கெட் பகுதிகளில் காங்கேயம் காளைகள் போல கட்டுப்பாடின்றி திரியும் இந்த திணவெடுத்த கும்பல் சமீபத்தில் ஐதராபாத் நகரில் நடைபெற்ற விநாயகர் சிலைகள் கரைப்பு ஊர்வலத்தில் கலந்துகொண்டு சிறுமிகள், பெண்களை பாலியல்ரீதியாக துன்புறுத்தியது.

தெலுங்கானா மாநிலத்தில் வெளியே செல்லும் பெண்களின் பாதுகாப்புக்கு என ‘ஷிடீம்’ என்ற பெயரில் பெண் போலீஸ் பறக்கும் படை உருவாக்கப்பட்டுள்ளது. ஐதராபாத் நகரில் நடைபெற்ற விநாயகர் சிலைகள் கரைப்பு ஊர்வலத்தின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்த சிறப்பு படையினர் சிறுமிகள் மற்றும் பெண்களிடம் கேவலமான முறையில் நடந்துகொண்ட கும்பலை கண்காணித்தனர்.

பட்டப்பகலில் பெண்கள் மற்றும் சிறுமிகள்மீது தண்ணீர் தெளிப்பது, பூக்களை வாரி இரைப்பது, அவர்களின் பின்பகுதியில் தட்டுவது, தொடைப்பகுதியில் தடவுவது போன்ற அக்கிரமங்களில் சிலர் ஈடுபடுவதை அவர்கள் கண்டுபிடித்தனர். மேலும், சிலர் அசாதாரண நிலையில் இருக்கும் பெண்களை ரகசியமாக வீடியோ எடுப்பதையும் பார்த்தனர்.

சிலரது சில்மிஷங்களை வீடியோ காட்சியாகவும் தங்களது கைபேசியில் போலீசார் பதிவு செய்தனர். சிவப்பு சட்டை அணிந்த ஒரு காமுகன் மட்டும் வரிசையாக பல பெண்களிடம் தனது கைவரிசையை காட்டும் காட்சிகள் போதும்.., இவனைப்போல எத்தனை அசிங்கமான பிறவிகள் இந்த நாட்டில் உலவுகின்றன என்பதை படம் பிடித்து காட்டுவதற்கு.

இதைப்போன்ற 30 காமுகர்களை கைது செய்த ஷிடீம் போலீசார், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஒரு கைபேசியில் சிக்கிய இந்த கொடூரம் நடுநிலையாளர்களின் பார்வைக்கு....,

https://www.facebook.com/sheteamhyd/videos/1439265326128539/

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com