

பெங்களூரு :
பெங்களூரு கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக டெல்லி, மும்பை, தமிழ்நாடு உள்பட வெளிமாநிலங்களில் இருந்து வந்த பெங்களூரு வாசிகளை மாநகராட்சி சுகாதாரத் துறையினர் மருத்துவ பரிசோதனை செய்து வருகிறார்கள். இவ்வாறு வந்தவர்கள் தற்காலிக தனிமை முகாம்களான ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்களில் 14 நாட்கள் தனிமையில் வைத்து கண்காணிப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் தனிமை முகாம்களில் தங்கியுள்ளவர்கள் வீடுகளுக்கு செல்ல மாநகராட்சி அதிகாரிகள் ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் 2 நாட்களுக்கு மட்டுமே முகாமில் இருந்து விட்டு வீட்டுக்கு செல்லும்படியும், 12-வது நாள் கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என்பதால் அன்றைய தினம் மீண்டும் தனிமை முகாமிற்கு வந்துவிடும்படி கூறியும் தனிமை நபர்களிடம் தலா ரூ.25 ஆயிரம் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு அனுப்பி வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இதுதொடர்பாக பெங்களூரு மாநகராட்சி சிறப்பு கமிஷனர் ரவிக்குமாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர், வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் கட்டாயம் 14 நாட்கள் தனிமை கண்காணிப்பில் இருக்க வேண்டும். தனிமை நபர்களை வெளியே செல்ல எந்த அதிகாரிக்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை. லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் தொடர்பாக விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தனிமை கண்காணிப்பில் இருப்பவர்களை சட்டவிரோதமாக லஞ்சம் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு அனுப்புவது கடும் குற்றம். இதுபோன்ற செயல்களில் எந்தவொரு அதிகாரியும் ஈடுபடக் கூடாது என்றார்.