

இந்தியாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது.
இன்று காலை வரை 34 ஆயிரத்து 901 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,154 பேர் பலியாகி உள்ளனர். சுமார் 9 ஆயிரம் பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் மே 3-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 3-ந்தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? அல்லது தளர்த்தப்படுமா? என்று மத்திய அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
கொரோனா பாதித்த மாவட்டங்களை மத்திய அரசு சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்களாக பிரித்துள்ளன. அதிகம் பாதித்துள்ள பகுதிகளை சிவப்பு மண்டலமாக அறிவித்துள்ளன.
இந்தியா முழுவதும் 130 சிவப்பு மண்டலங்களை மத்திய சுகாதாரத்துறை அடையாளம் கண்டுள்ளது.
இந்த 130 சிவப்பு மண்டலத்திலும் ஊரடங்கை மத்திய அரசு நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இங்கு மேலும் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும்.
ஆரஞ்சு மண்டலங்களில் ஊரடங்கு ஓரளவு தளர்ப்படும். பச்சை மண்டலங்களில் எந்தவித கட்டுப்பாடுகளும் இருக்காது.
அனைத்து மெட்ரோ நகரங்களும் சிவப்பு மண்டலத்தில்தான் இருக்கின்றன. டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, ஐதராபாத், பெங்களூர் மற்றும் அகமதாபாத் ஆகிய பெருநகரங்கள் இதில் வருகின்றன.
உத்தரபிரதேச மாநிலத்தில் தான் அதிகபட்சமாக 19 சிவப்பு மண்டலங்கள் உள்ளன. லக்னோ, ஆக்ரா உள்ளிட்ட பகுதிகள் இதில் அடங்கும். அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரத்தில் மும்பை, புனே, நாசிக், நாக்பூர் உள்பட 14 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் உள்ளன.
அதற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பூர், மதுரை, நாமக்கல், தஞ்சை, ராணிப்பேட்டை, விருதுநகர், திருவாரூர், வேலூர் ஆகிய 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் உள்ளன.
டெல்லியில் உள்ள அனைத்து மாவட்டங்களும் (11) சிவப்பு மண்டலத்தில் வருகின்றன.
மே 3-ந்தேதிக்கு பிறகு 130 சிவப்பு மண்டலத்திலும் மேலும் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும். அங்கு எந்தவித செயல்பாடுகளும் இருக்காது.