என் பின்னால் கடவுளும், மக்களும் தான் உள்ளனர், பாஜக இல்லை - சென்னை திரும்பிய ரஜினி பேட்டி

என் பின்னால் பாஜ கட்சி இல்லை கடவுளும், மக்களும் தான் உள்ளனர் என்று இமயமலையில் இருந்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். #Rajinikanth
என் பின்னால் கடவுளும், மக்களும் தான் உள்ளனர், பாஜக இல்லை - சென்னை திரும்பிய ரஜினி பேட்டி
Published on

நடிகர் ரஜினிகாந்த் தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றியுள்ளார். அதற்கு தீவிர உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. மாவட்டம் வாரியாக நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், கடந்த 10-ஆம் தேதி ஆன்மீக பயணமாக இமயமலை உள்ளிட்ட வடஇந்திய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்ட ரஜினி இன்று காலை சென்னை வந்தடைந்தார். இதையடுத்து போயஸ் தோட்டம் வந்த ரஜினியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். அப்போது, 

ஆன்மிக பயணம் சென்று வந்தது மனதிற்கு புத்துணர்ச்சி அளித்திருக்கிறது. 16 மாவட்ட நிர்வாகிகளை தேர்வு செய்த பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தான் ஈடுபட இருக்கிறேன். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது காட்டுமிராண்டித்தனமானது. 

ராமராஜ்ய ரத யாத்திரை குறித்த கேள்விக்கு பதில் அளித்த ரஜினி, தமிழகம் மதசார்பற்ற நாடு. ரத யாத்திரை என்பது மத கலவரத்திற்கு இடம் கொடுக்காமல் போலீசார் பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அரசு தடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. 

ரஜினியின் பின்னணியில் பாரதிய ஜனதா கட்சி இருக்கிறதா, பாஜக தலைவர்களை சமீபத்தில் சந்தித்ததாக வெளியான தகவலுக்கு, விளக்கம் அளித்த ரஜினி, என் பின்னால் பாரதிய ஜனதா கட்சி இல்லை. கடவுளும், மக்களும் தான் உள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனை மதித்து நடக்க வேண்டும். மத்திய அரசு விரைந்து காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். தமிழக அரசு மேலும் வலு கொடுக்க வேண்டும் என்றார். 

மேலும் ஏப்ரல் 14-ஆம் தேதி கட்சிக் கொடி அறிமுகப்படுத்தப் போவதாக வெளியான செய்திக்கு ரஜினிகாந்த் மறுப்பு தெரிவித்துள்ளார். #Rajinikanth

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com