

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் டோரதி.செப்டம்பர் 25ம் தேதி திரையில் வெளியான திரைப்படத்தை பலரும் கொண்டாடி வருகின்றனர். பாலின அடையாளம் ,சமூகப் பிரச்சனைகளை துணிச்சலாக பேசியதற்காகவும், இளையராஜவின் ஆழமான இசைக்காகவும் இப்படம் பாராட்டுகளை பெற்று வருகிறது . இந்த நிலையில் இத்திரைப்படத்திற்கு இயக்குநர் சேரன் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது
டோரதி இதை பார்க்கும் முன்னால நீங்க நிறைய இந்த சமூகத்தை, மனிதர்களை படிக்கனும். அப்போத்தான் புரியும்.எதுனால முதல் பகுதில அவ்வளவு வன்மம் , ரத்தம், பழிக்குப்பழி, சாதிச்சண்டை, மொழிபேதம்னு மனித அழுக்குகளால் ஆன முதல்பாதியில் இருந்து ஏன் இரண்டாவது பகுதி முழுக்க வேற படமா இருக்கு.இயற்கையும் தீராத காதலும் சுமந்து வீசும் தென்றலாக அவ்வளவு மென்மை, பாலினம் தாண்டிய அன்பு, பயணம், வெறுப்பையும் நேசிக்கும் பக்குவம்,
நீ எதுவாக வேண்டுமானலும் இரு நான் அன்பு காட்டுவேன் என்ற உண்மை காட்டுக்கூச்சலால் தலைநிமிர்ந்து நிற்பதாக ஆர்ப்பரிக்கும் ஆறாவது அறிவை பயன்படுத்தாத சமூகத்துக்குள் பாலினம் அற்ற ஒரு உயிர் புல்லாங்குழலால் இசைக்கிறது. காற்றுக்கும் துவாரத்துக்கும் நடுவில் இசை உருவாகும் அதிசயமே வாழ்க்கை என திரைப்படத்தின் உருவாக்கத்தில் கார்த்திக் சுப்பராஜ் பிரமிக்க வைக்கிறார்.
அவர் திரையில் எழுதிய திரைக்(புதுக்)கதைதான் எனக்கு இந்த புரிதலை சொல்லித்தந்தது. சினிமாவில் இருக்கும் நிறையபேர் பாராட்டிய பின்னர் நான் சொல்வது சாதாரணமாக கூட இருக்கலாம். ஆனால் நான் இன்னும் நல்ல ரசிகன் என்பதை நான் படம் பார்த்த பின்னர் எனக்குள் ஏற்பட்ட சந்தோசம் சொன்னது.வெல்டன்.படம் உருவாக்கத்தில் பயணித்த அத்தனை பேருக்கும் வாழ்த்துக்கள்.
மேன்மைமிகு இளையராஜா வெறித்தனமா பின்னனி இசை, நீண்ட நாட்களுக்கு பின்னர் திரைக்கதையோடு சேர்ந்து எட்டா உயரத்தில் எழுந்து நின்று ஆர்ப்பரித்த இசை பிரமிப்பின் உச்சம்.
மனுஷனை எந்த அடையாளமும் இல்லாம நேசிக்க ஆரம்பிக்கும் உலகமே சொர்க்கம். தற்காலிக வெற்றி தோல்விகளை வைத்து மனிதனை அடையாளப்படுத்தும் கலாச்சாரம் கூட அசிங்கம் தான்.நல்லபடத்தை கொண்டாடிக்கொண்டிருக்கும் மக்களுக்கே நான் நன்றி சொல்வேன்
என்று தெரிவித்துள்ளார்.