தி கிராண்ட் மாஸ்டர்- திரை விமர்சனம்
தி கிராண்ட் மாஸ்டர்- திரை விமர்சனம்(2.5 / 5)
விளையாட்டை மையமாக வைத்து ஏற்கனவே பல படங்கள் வந்திருந்தாலும், சதுரங்கத்தை ஒரு விளையாட்டாக மட்டுமல்லாமல், சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான களமாகவும் இயக்குனர் வெற்றி செழியன் இயக்கி இருப்பது படத்தின் சிறப்பு.
கதை
விளையாட்டில் ஏழை, பணக்காரன் என்ற பேதம் இல்லை… திறமை இருந்தால் உலகமே உன்னை திரும்பிப் பார்க்கும்! என்ற அழுத்தமான கருத்தை சதுரங்க களத்தில் சொல்ல முயற்சித்திருக்கிறது தி கிராண்ட் மாஸ்டர்.
சென்னையில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வருகிறார் அபர்ணதி. கணவர் லிங்கேசை இழந்த நிலையில், தனது ஒரே மகன் அஸ்வினை எப்படியாவது வக்கீலாக உருவாக்க வேண்டும் என்பதுதான் அவரது கனவு. அரசு பள்ளியில் படித்து வரும் அஸ்வினுக்கு படிப்பை விட செஸ் விளையாட்டின் மீது அதிக ஆர்வம்.
ஆனால், பள்ளி ஆசிரியரோ அஸ்வினின் ஆர்வத்திற்கு முட்டுக்கட்டை போடுகிறார். இந்நிலையில் ஒரு போலீஸ் அதிகாரியின் உதவியுடன் பள்ளி அளவிலான சதுரங்க போட்டியில் கலந்து கொள்ளும் அஸ்வின், தனது திறமையால் வெற்றி பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறார். அந்த வெற்றி அஸ்வினுக்குள் இன்னொரு பெரிய கனவை உருவாக்குகிறது. செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வெல்ல வேண்டும்! என்ற லட்சியத்துடன் அடுத்தடுத்த போட்டிகளில் பங்கேற்க தயாராகிறார்.
ஆனால் திறமை இருந்தால் மட்டும் போதுமா? வசதி, வாய்ப்பு, பணம் என பல விஷயங்களும் தேவைப்படும் சூழல் அஸ்வினின் கனவுக்கு தடையாக நிற்கிறது. அதைவிட சதுரங்க விளையாட்டு சங்கத் தலைவர் சுரேஷ் மேனனின் எதிர்ப்பு அவருக்கு மிகப்பெரிய சவாலாக மாறுகிறது. அஸ்வினை விளையாட விடாமல் சுரேஷ் மேனன் தடுப்பது ஏன்? தாயின் கனவை மகன் நிறைவேற்றினானா? என்பதற்கான விடையே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
துப்புரவு பணியாளராக நடித்திருக்கும் அபர்ணதி, கதாபாத்திரத்திற்குள் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். கணவர் மீது இருக்கும் காதல், மகன் மீது இருக்கும் பாசம், அவனுடைய எதிர்காலத்திற்காக அவர் படும் கஷ்டங்கள் என பல இடங்களிலும் தனது நடிப்பால் மனதைத் தொடுகிறார்.
லிங்கேஷ் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். மகன் அஸ்வின் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிறுவனும் அமைதியான உடல்மொழியுடன் கவனம் ஈர்க்கிறார். குறிப்பாக பள்ளியில் குப்பைகளை சுத்தம் செய்யும் காட்சி மனதை நெருடுகிறது. சுரேஷ் மேனன் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். விளையாட்டை மையமாக வைத்து ஏற்கனவே பல படங்கள் வந்திருந்தாலும், சதுரங்கத்தை ஒரு விளையாட்டாக மட்டுமல்லாமல், சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான களமாகவும் இயக்குனர் வெற்றி செழியன் இயக்கி இருப்பது படத்தின் சிறப்பு.
தினேஷ் ஆண்டனியின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக இருக்கின்றன. அர்ஜுன் ரவி மற்றும் ஞானசேகரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்க்கிறது.

