தி டார்க் ஹெவன்
தி டார்க் ஹெவன்

தி டார்க் ஹெவன்- திரை விமர்சனம்

மழையும் இரவும் நிறைந்த காட்சிகள் படத்தின் திகில் உணர்வை கூட்டுகின்றன. சக்தி பாலாஜியின் பின்னணி இசையும் பல காட்சிகளில் பரபரப்பை அதிகரிக்கிறது.
Published on
தி டார்க் ஹெவன்- திரை விமர்சனம்(3 / 5)
Summary

மலை சூழ்ந்த மேக்கரை கிராமத்தில் தொடரும் மர்ம மரணங்களின் பின்னணி சாபமா, சைக்கோ கொலையாளியா என்ற குழப்பத்தில் நகரும் ‘தி டார்க் ஹெவன்’ திகில் திரைக்கதை, சித்துவின் கம்பீரமான இன்ஸ்பெக்டர் நடிப்பு, ரித்விகாவின் முக்கிய திருப்பம், இருள்-மழை காட்சிகளால் உருவாகும் அச்ச உணர்வு, சில நீளமான காட்சிகள் இருந்தாலும் கடைசி வரை ரகசியத்தை காப்பாற்றும் இயக்குநர் பாலாஜியின் முயற்சியால் ஈர்க்கிறது.

கதை

7 வருடங்களுக்கு ஒருமுறை… அதுவும் ஜூன் மாதத்தில் மட்டும்! மேக்கரை என்ற கிராமத்தில் சில ஆண்கள் மர்மமான முறையில் உயிரிழக்கின்றனர். இந்த மரணங்களுக்கு பல வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த இளம் பெண்ணின் சாபம்தான் காரணம் என்று ஊர் மக்கள் நம்புகின்றனர். அதே நேரத்தில், கிராமத்தைச் சுற்றி சைக்கோ கொலையாளி ஒருவன் நடமாடுவதாகவும் தகவல்கள் பரவுகின்றன. சாபத்துக்கும் கொலைக்கும் இடையே இருக்கும் மர்மம் என்ன என்பதே படத்தின் மையக்கதை.

மலை சூழ்ந்த மலைக்கிராமத்தில் மர்ம மரணங்கள் தொடர, அதை விசாரிக்க இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்கிறார் சித்து. ஒவ்வொரு மரணத்திற்குப் பின்னாலும் இருக்கும் ரகசியத்தைத் தேடும் அவருக்கு எதிராக பல்வேறு தடைகளும் சவால்களும் வர, அவற்றை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதே மீதிக்கதை.

நடிகர்கள்

இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் சித்து, இறுக்கமான முகபாவனையுடன் கம்பீரமான உடல்மொழியோடு கதைக்களத்திற்கு ஏற்ற நேர்த்தியான நடிப்பை வழங்கியிருக்கிறார். விசாரணைக் காட்சிகளில் அவரது அமைதியான அணுகுமுறை கதையின் மர்மத்துக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.

கணவனை இழந்து ஊரைவிட்டு ஒதுங்கி வாழும் பெண்ணாக வரும் ரித்விகாவின் கதாபாத்திரம் படத்தின் முக்கிய திருப்புமுனையாக அமைகிறது. குறிப்பாக கிளைமாக்சில் அவர் தரும் எதிர்பாராத திருப்பம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்துகிறது. சித்துவின் மனைவியாக தர்ஷிகா, ஊர் நாட்டாமையாக வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், விஜய் சத்யா, மேத்யூ வர்கீஸ், அருள்சங்கர் உள்ளிட்டோர் தங்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிப்பை வழங்கியுள்ளனர்.

தொழில்நுட்ப குழு

காடு, மலை, மேடு என இயற்கை சூழ்ந்த பகுதிகளை இருள் மற்றும் வெளிச்சத்தின் வழியாக கதையுடன் கலந்து பயணிக்கச் செய்திருக்கிறது மணிகண்டன் பி.கே-வின் ஒளிப்பதிவு. மழையும் இரவும் நிறைந்த காட்சிகள் படத்தின் திகில் உணர்வை கூட்டுகின்றன. சக்தி பாலாஜியின் பின்னணி இசையும் பல காட்சிகளில் பரபரப்பை அதிகரிக்கிறது.

என்னதான் மர்மத்தையும் சஸ்பென்சையும் தக்கவைக்க முயன்றாலும், சில இடங்களில் காட்சிகள் நீளமாக நகர்வது படத்தின் வேகத்திற்கு சிறிய பலவீனமாக அமைகிறது. இருந்தாலும், கொலையாளி யார் என்பதை யூகிக்க முடியாத அளவுக்கு கடைசி வரை ரகசியத்தை காப்பாற்றியிருப்பது இயக்குநர் பாலாஜியின் திரைக்கதைக்கு பலம்.

மொத்தத்தில், சாபமா… சைக்கோ கொலையாளியா… என்ற கேள்வியுடன் பார்வையாளர்களை பயணிக்க வைத்து உள்ளது ‘தி டார்க் ஹெவன்’.

X

Maalai Malar
www.maalaimalar.com