தாய் நிலம்- திரை விமர்சனம்
தாய் நிலம்- திரை விமர்சனம்(2.5 / 5)
கதை
இலங்கைப் போரின் கொடூரத்தில் வீடு, உறவுகள், சொந்த மண் என அனைத்தையும் இழந்த அமர் ராமச்சந்திரன் தனது மகள் நேகாஅமருடன் தமிழகத்தில் அகதியாக தஞ்சம் புகுகிறார். கையில் இருப்பது உயிர் மட்டுமே. புதிய மண்ணில் பேருந்து நிறுத்தத்தையே தற்காலிக வசிப்பிடமாக்கிக் கொண்டு வாழ்க்கையை நகர்த்தும் அவர்களுக்கு பசி, வேலை இல்லாமை, பாதுகாப்பற்ற சூழல் என பல்வேறு பிரச்சனைகள் வரிசை கட்டுகின்றன. இந்தப் போராட்டங்களுக்கு மத்தியில் தந்தையும் மகளும் எப்படி வாழ்க்கையை எதிர்கொள்கிறார்கள் என்பதே படத்தின் கதை.
நடிகர்கள்
டாக்டர் அமர் ராமச்சந்திரன், மகள் மீதான பாசத்தையும், கடந்த காலத்தின் வலியையும், எதிர்காலம் குறித்த அச்சத்தையும் மிகையில்லாமல் வெளிப்படுத்துகிறார். சிறுமி நேகா அமரும் தனது நடிப்பில் இயல்பை வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார். பாலாசிங் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களுக்கான கதாபாத்திரங்களை நிறைவாக செய்துள்ளனர். போரின் வலியையும் அகதிகளின் வாழ்க்கையையும் உணர்வுபூர்வமாக கடத்துகிறது அவுசேப்பச்சனின் பின்னணி இசை. பிரசாந்த் பிரணவத்தின் ஒளிப்பதிவு கதையின் சூழலுக்கு கச்சிதமாக பொருந்துகிறது. பாடல்களும் கதையின் உணர்வுகளோடு இணைந்து பயணிக்கின்றன.
போர் காட்சிகளின் பிரமாண்டத்தையோ வன்முறையையோ முன்னிறுத்தாமல், ஒரு தந்தை-மகள் உறவின் வழியே அகதிகளின் வாழ்க்கையையும் மனிதநேயத்தையும் பதிவு செய்திருப்பது இயக்குநர் அபிலாஷ் ஜி. தேவனின் குறிப்பிடத்தக்க முயற்சி.
தாய் நிலத்தை இழந்தவர்களின் வலியையும், ஒரு மனிதனுக்கு மற்றொரு மனிதன் தரும் ஆதரவின் மதிப்பையும் பேசும் படமாக ‘தாய் நிலம்’ மனதில் நிற்கிறது.

