

மருத்துவத்துறையில் ஊடுருவியுள்ள மாபியா கும்பலின் சட்டவிரோத செயல்களை வெளிச்சமிட்டுக் காட்டும் ‘செய், செய்யாதே’ திரைப்படம், சமூக அக்கறையுடன் ஒரு முக்கிய பிரச்சனையை முன்வைக்கிறது. நேர்மையான மருத்துவ சேவையையும், பணத்திற்காக தவறான வழியில் செல்லும் குடும்ப உறுப்பினர்களின் முரண்பாடுகளையும் மையமாகக் கொண்ட கதை, பார்வையாளர்களை சிந்திக்க வைக்கிறது.
மருத்துவம் என்பது ஏழைகளுக்கு உயிர் கொடுக்கும் சேவையாக இருக்க வேண்டுமே தவிர, பணம் சம்பாதிக்கும் தொழிலாக மாறிவிடக் கூடாது. ஆனால், மருத்துவத்தையே மூலதனமாக வைத்து சிலர் நடத்தும் பணக்கொள்ளையையும், மருத்துவத்துறையில் ஊடுருவியுள்ள மாபியா கும்பலின் சட்டவிரோத செயல்களையும் தோலுரித்துக் காட்ட முயற்சித்திருக்கிறது ‘செய் செய்யாதே’.
மதுரையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியின் டீனாகப் பணியாற்றும் டாக்டர் எஸ்.ராஜா, ஏழை மக்களுக்கு நேர்மையான முறையில் சிகிச்சை அளித்து சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டு வருகிறார். ஆனால், அவரது மனைவியும் மருத்துவருமான தர்ஷினி ரெட்டி, கடன் வாங்கி பெண்களுக்கான சிறப்பு மருத்துவமனை ஒன்றைத் தொடங்கி, சிகிச்சை என்ற பெயரில் நோயாளிகளிடம் பணம் பறித்து வருகிறார்.
மறுபுறம் இவர்களது மகனான டாக்டர் குரு விஜய், தன்னுடன் படிக்கும் தபிதா குணரத்னேவைக் காதலிக்கிறார். ஒருபுறம் நேர்மையான மருத்துவச் சேவையில் ஈடுபடும் தந்தை, மறுபுறம் பணத்திற்காக தவறான வழியில் செல்லும் மனைவி, மகன் என குடும்பத்திற்குள்ளேயே முரண்பாடுகள் வெடிக்கின்றன. டாக்டர் எஸ்.ராஜாவுக்கு எதிராக மனைவியும், மகனும் செயல்பட, அதன் பின்னணியில் நடக்கும் சம்பவங்களும், அதற்கான முடிவும்தான் மீதிக்கதை.
படத்தை எழுதி இயக்கியிருப்பதுடன், முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ள டாக்டர் எஸ்.ராஜா, தனது கதாபாத்திரத்தை இயல்பாகக் கையாண்டுள்ளார். ஆங்காங்கே நகைச்சுவையிலும் கவனம் ஈர்க்கிறார். சதி வேலைகளில் குரு விஜய் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது காதலியாக வரும் தபிதா குணரத்னே அளவான நடிப்பை வழங்கியுள்ளார்.
தர்ஷினி ரெட்டி, மோனிகா பிரீத்தி.வி, சிதம்பரம் பிடிகே, பிரதிக்ஷா மனோ பிரசாந்த் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்துள்ளனர். தமிழக முதலமைச்சராக பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா நடித்திருப்பது கவனம் ஈர்க்கிறது. படத்தின் பாடல்களுக்கு டாக்டர் எஸ்.ராஜா இசை அமைத்துள்ளார். ராம்நாடு பி.வாசுவின் ஒளிப்பதிவும், ராஜா முகமதுவின் படத்தொகுப்பும் படத்திற்குத் தேவையான தொழில்நுட்பப் பங்களிப்பை வழங்கியுள்ளன.
மருத்துவத்துறையில் மாபியா கும்பல் நடத்தும் சட்டவிரோதச் செயல்கள், நோயாளிகளின் அறியாமையைப் பயன்படுத்திப் பணம் பறிக்கும் அவலங்கள் என சமூக அக்கறையுடன் ஒரு முக்கியமான பிரச்சனையைப் பேச முயற்சித்திருக்கிறார் இயக்குநர் டாக்டர் எஸ்.ராஜா.