சட்டமும் நீதியும் 2

சட்டமும் நீதியும் 2: விமர்சனம்

யார் குற்றவாளி என்ற கேள்வியை எழுப்பி, அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் மூலம் பார்வையாளர்களைத் திரையுடன் ஒன்ற வைப்பதில் இயக்குநர் வெற்றி பெற்றிருக்கிறார்.
Published on: 
சட்டமும் நீதியும் 2: விமர்சனம்(3.5 / 5)
Summary

கணவனை இழந்த மனைவியின் நீதி தேடும் போராட்டமும், குற்றம் சாட்டப்பட்டவர்களின் நிரபராதத்தை நிரூபிக்க முயலும் வழக்கறிஞரின் வாதங்களும் மையமாக, நீதிமன்றத்தில் பரபரப்பை உருவாக்கும் 'சட்டமும் நீதியும் 2' தொடரின் திரைக்கதை விறுவிறுப்பாக அமைந்துள்ளது.

கதை

போலீஸ் அதிகாரி பிரேம் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்படுகிறார். இந்தக் கொலை வழக்கில் அவருடன் பணியாற்றிய போலீஸ் அதிகாரிகளான கவிதா பாரதி, ஆசைபாலா, கல்லூரி வினோத் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்படுகின்றனர். கணவரின் கொலைக்குக் காரணமானவர்களுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் பிரேமின் மனைவியும் வழக்கறிஞருமான வரலட்சுமி சரத்குமார். மறுபுறம், கைது செய்யப்பட்ட போலீஸ்காரர்கள் குற்றவாளிகள் அல்ல; நிரபராதிகள் என்று வாதாடுகிறார் வழக்கறிஞர் பருத்திவீரன் சரவணன். ஒருபுறம் கணவனை இழந்த மனைவியின் நீதி தேடும் போராட்டம்; மறுபுறம் குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பு நியாயத்தை நிரூபிக்க வேண்டிய வழக்கறிஞரின் வாதம் என நீதிமன்றத்தில் பரபரப்பு கூடுகிறது.

உண்மையில் பிரேமைக் கொன்றவர்கள் யார்? இந்தக் கொலையின் பின்னணியில் இருப்பது என்ன? கைது செய்யப்பட்ட போலீஸ்காரர்கள் உண்மையான குற்றவாளிகளா, அல்லது நிரபராதிகளா? இந்தக் கேள்விகளுக்கான விடைகளே தொடரின் மீதிக்கதை.

இயக்குநர்

போலீசாரையும் வழக்கறிஞர்களையும் பெரும்பாலான திரைப்படங்களில் எதிர்மறையான கதாபாத்திரங்களில் பார்த்துப் பழகிய ரசிகர்களுக்கு, அவர்களை நேர்மறையான கோணத்தில் அணுகியிருப்பது தொடரின் தனிச்சிறப்பு. நீதி, நேர்மை, மனிதநேயம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு, நீதிமன்ற விசாரணைகளுக்கு இடையே சுவாரசியத்தையும் விறுவிறுப்பையும் கலந்து திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் பாலாஜி செல்வராஜ். யார் குற்றவாளி என்ற கேள்வியை எழுப்பி, அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் மூலம் பார்வையாளர்களைத் திரையுடன் ஒன்ற வைப்பதில் இயக்குநர் வெற்றி பெற்றிருக்கிறார்.

நடிகர்கள்

குறிப்பாக, நீதிமன்றத்தில் முன்வைக்கப்படும் வாதங்களும், வழக்கின் பின்னணியில் இருக்கும் மர்மத்தை அறிந்துகொள்ளும் ஆர்வமும் கதையைத் தொடர்ந்து பார்க்க வைக்கின்றன. நேர்மையும் நியாயமும் தவறாத வழக்கறிஞராக வரும் பருத்திவீரன் சரவணன், தனது இயல்பான நடிப்பாலும் யதார்த்தமான உடல்மொழியாலும் கதாபாத்திரத்துக்கு நம்பகத்தன்மை சேர்க்கிறார். ஆர்ப்பாட்டமில்லாத அவரது நடிப்பு, வழக்கறிஞர் கதாபாத்திரத்துக்கு வலு சேர்க்கிறது.

கணவரின் கொலைக்குக் காரணமானவர்களுக்குத் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்ற உறுதியுடன் வாதாடும் வரலட்சுமி சரத்குமார், அமைதியான உடல்மொழியிலும் அழுத்தமான நடிப்பிலும் கவனம் ஈர்க்கிறார். லாவண்யா, கல்லூரி வினோத், ஆசைபாலா, பிரேம், கவிதா பாரதி உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் சிறப்பாகப் பங்களித்துள்ளனர்.

விபின் பாஸ்கரின் இசை காட்சிகளின் உணர்வுகளுக்கு ஏற்ற வகையில் பயணிக்கிறது. கோகுல கிருஷ்ணனின் ஒளிப்பதிவு நீதிமன்றக் காட்சிகளுக்கும் கதையின் நகர்வுக்கும் பொருத்தமாக அமைந்துள்ளது. குற்றவாளிகள் யார்? நிரபராதிகள் யார்? உண்மையைத் தேடும் சுவாரசியமான விசாரணை! சட்டமும் நீதியும் 2.

X

Maalai Malar
www.maalaimalar.com