பாரிஸ் கபே- திரை விமர்சனம்
பாரிஸ் கபே- திரை விமர்சனம் (3 / 5)
வெளிநாட்டில் வேலைக்காக போராடும் அர்ச்சனா, வேலை கிடைத்த மகிழ்ச்சியை பகிர அழைக்கும் போது பெற்றோர் பிரிந்து வாழ்கிறார்கள் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைகிறார். காதலன் விஜய் விஸ்வாவுடன் ஊருக்கு வந்து, தந்தை டாக்டர் குரு சோமசுந்தரத்திடம் காரணம் கேட்கும் போது கதை எதிர்பாராத திருப்பம் பெறுகிறது. குடும்ப உணர்வுகளும் திரில்லர் அம்சங்களும் கலந்த ‘பாரிஸ் கபே’யில் நடிப்பு, இசை, ஒளிப்பதிவு அனைத்தும் கதையை தாங்குகின்றன.
கதை
வெளிநாட்டில் தங்கி வேலை தேடி அலையும் அர்ச்சனாவுக்கு ஒரு கட்டத்தில் வேலை கிடைக்கிறது. அந்த மகிழ்ச்சியான செய்தியை சொந்த ஊரில் இருக்கும் தனது பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படும் அவர், அம்மாவான அனுமோலை தொடர்பு கொள்கிறார். ஆனால், தொலைபேசி உரையாடலில் பெற்றோர் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவது அர்ச்சனாவுக்கு தெரிய வருகிறது.
இதனால் அதிர்ச்சியடையும் அர்ச்சனா, பெற்றோரின் பிரிவுக்கான காரணத்தை தெரிந்து கொள்வதற்காகவும், அவர்களை மீண்டும் சேர்த்து வைக்க வேண்டும் என்ற எண்ணத்துடனும் தனது காதலன் விஜய் விஸ்வாவுடன் சொந்த ஊருக்கு புறப்பட்டு வருகிறார். அங்கு தந்தையான டாக்டர் குரு சோமசுந்தரத்தை சந்திக்கும் அர்ச்சனா, அம்மாவைப் பிரிந்ததற்கான காரணத்தை கேட்க, அவர் சொல்லும் தகவல் கதைக்கு எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்துகிறது.
ஒருபுறம் பெற்றோரின் பிரிவுக்கான உண்மையை அறிந்து கொள்ளும் அர்ச்சனா, மறுபுறம் இருவரையும் மீண்டும் ஒன்றாகச் சேர்க்க போராடுகிறார். அவரது முயற்சி வெற்றி பெற்றதா? பிரிந்த பெற்றோர் மீண்டும் இணைந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
டாக்டர் கதாபாத்திரத்தில் வரும் குரு சோமசுந்தரம், தொழில் ரீதியான மிரட்டல்களுக்கு இடையே பணிவதா, எதிர்ப்பதா என்று தவிக்கும் தருணங்களை மிகவும் இயல்பான நடிப்பால் வெளிப்படுத்தியுள்ளார்.
அநியாயத்திற்கு எதிராக கொந்தளிக்கும் மனைவி கதாபாத்திரத்தில் அனுமோல், கதைக்கு தேவையான அழுத்தத்தை கொடுத்துள்ளார்.
அர்ச்சனாவாக பெற்றோரை மீண்டும் சேர்த்து வைக்க முயற்சிக்கும் உணர்வுப்பூர்வமான காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். காதலனாக வரும் விஜய் விஸ்வா தனது கதாபாத்திரத்திற்கு தேவையான பங்களிப்பை கொடுத்துள்ளார். சாய் விக்கி, நயனா சாய், பிபின் குமார் ஆகியோரின் நடிப்பும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. கே-வின் இசை கதையின் உணர்வுகளுக்கும் திரில்லர் தருணங்களுக்கும் பொருத்தமாக பயணிக்கிறது. சதீஷ் ஜி-யின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு அழகையும், கதையின் மனநிலைக்கு ஏற்ற காட்சியமைப்பையும் வழங்குகிறது.
குடும்ப உறவுகளின் உணர்வுகளோடு திரில்லரையும் கலந்து சொல்ல முயற்சித்திருக்கும் படம் ‘பாரிஸ் கபே’.

