'அமரன்' மேஜிக்கை மீண்டும் நிகழ்த்தினாரா ராஜ்குமார் பெரியசாமி?- தனுஷ் நடித்துள்ள 'ஓம்' திரை விமர்சனம்

'அமரன்' மேஜிக்கை மீண்டும் நிகழ்த்தினாரா ராஜ்குமார் பெரியசாமி?- தனுஷ் நடித்துள்ள 'ஓம்' திரை விமர்சனம்

எழில் அரசுவின் ஒளிப்பதிவும் சாய் அபயங்கரின் இசையும் படத்துடன் ஒன்ற வைக்கிறது. பரபரப்பான திரைக்கதை படத்துக்கு பலம்.
Published on: 
'ஓம்' திரை விமர்சனம்(4 / 5)

'அமரன்' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி ஆகியோரின் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் 'ஓம்' .

தமிழ்நாடு - ஆந்திர எல்லையில் நடக்கும் செம்மரக் கடத்தலையும், அதன் பின்னணியில் இருக்கும் சர்வதேச வலையமைப்பையும் மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

கதை

செம்மரக் கடத்தல் கும்பலுக்கு ஆதரவாக சென்னையில் வசிக்கும் மம்முட்டி செயல்பட்டு வருகிறார். கடத்தப்படும் செம்மரக்கட்டைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி வருகிறார். இதற்கிடையில் ஆந்திராவில் அமையும் புதிய அரசு செம்மரக்கட்டை கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சிக்கிறது இதற்காக சிறப்பு அதிரடி படையை உருவாக்குகிறது.

இந்த அதிரடிப்படைக்கு கட்டுப்பாட்டாளராக நியமிக்கப்படும் சாய் பல்லவி, தமிழக காவல்துறையில் சிறப்பு அதிரடிப்படையில் இருக்கும் தனுஷை தனது முக்கிய திட்டத்திற்கு பயன்படுத்துகிறார். அதன்படி மம்முட்டி கும்பலில் தனுஷ் இணைகிறார் மம்முட்டிக்கு நம்பிக்கைக்குரியவராக திகழ்கிறார்.

இதற்கிடையில் துபாயில் இருக்கும் முக்கிய உளவாளியை கைது செய்வதற்காக காவல்துறை திட்டம் தீட்டுகிறது. அதன்படி மம்முட்டி பதுக்கி வைத்திருக்கும் செம்மரக்கட்டைகளை தனுஷ் மூலமாக துபாய்க்கு அனுப்பி வைக்கிறது. இதன் மூலம் துபாயில் இருக்கும் இந்த கடத்தல் கும்பலின் தலைவன் வெளிச்சத்துக்கு வருகிறார்.

இதையடுத்து ஒட்டுமொத்த கடத்தல் கும்பலை கைது செய்வதற்காக காவல்துறை பெரிய திட்டம் ஒன்றை தீட்டுகிறது. இந்தத் திட்டத்தில் அதிர்ஷ்டவசமாக மம்முட்டியும், தனுஷும் தப்பிவிட, எதிர்பாராத விதமாக தனுஷின் தந்தை இந்திரன்ஸ் மாட்டிக்கொள்கிறார். ஆந்திர போலீசாரால் சுட்டுக் கொல்லப்படுகிறார். இதனால் வெகுண்டெழும் தனுஷ் தன்னை நியமித்த காவல் படைக்கு எதிராகவே களமிறங்குகிறார். அதன்பிறகு என்ன ஆனது? யார் கை ஓங்கியது? என்பதே படத்தின் மீதி கதை.

தனுஷ்

நீண்ட நாட்களுக்குப் பிறகு துறுதுறுப்பான, அதே சமயம் ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தில் தனுஷ் மிளிர்கிறார். குறிப்பாக அவரது அறிமுகக் காட்சி மற்றும் சண்டைக் காட்சிகளில் 'தனுஷ் இஸ் பேக்' என்று சொல்லும் அளவிற்குப் பங்களிப்பைக் கொடுத்துள்ளார்.

மம்மூட்டி

'பர்மா கார்த்தி' கதாபாத்திரத்தில் மம்மூட்டியின் அனுபவ நடிப்பு படத்திற்குப் பெரும் பலம். வழக்கமான வில்லன் அல்லது கடத்தல்காரன் போல இல்லாமல், கதாபாத்திரத்தின் பின்னணியால் மனதைத் தொடும் விதமாக நடித்துள்ளார்.

சாய் பல்லவி

ஐ.பி.எஸ் அதிகாரி நித்யா ரெட்டியாக மிரட்டியுள்ளார் சாய் பல்லவி . கம்பீரமான காவல் அதிகாரி மற்றும் ஒரு மகளாக அவருக்கு இருக்கும் தனிப்பட்ட கோபம் என இரு பரிமாணங்களிலும் ஸ்கோர் செய்துள்ளார்.

மற்ற நடிகர்கள்

இவர்களுடன் ஸ்ரீலீலா, பிரசன்னா, இந்திரன்ஸ், ரேணு தேசாய் ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களைச் சிறப்பாகச் செய்துள்ளனர். ஆனால், நசீருதீன் ஷா போன்ற ஒரு மூத்த நடிகரின் கதாபாத்திரம் இன்னும் வலுவாக சொல்லியிருக்கலாம்.

எழில் அரசுவின் ஒளிப்பதிவும் சாய் அபயங்கரின் இசையும் படத்துடன் ஒன்ற வைக்கிறது. பரபரப்பான திரைக்கதை படத்துக்கு பலம். சில காட்சிகளை யூகிக்க முடிகிறது. சில காட்சிகளில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.

வழக்கமான செம்மரக்கட்டை கடத்தல், போலீசார் நடவடிக்கை என்ற ரீதியில் கதை பயணித்தாலும், விறுவிறுப்பான காட்சிகள் மூலம் படம் முழுக்க கவனிக்க வைத்துள்ளார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி. இடைவேளையும், கிளைமாக்ஸ் காட்சியும் பரபரப்பின் உச்சம்.

X