ஆக்டோபஸ்- திரை விமர்சனம்
ஆக்டோபஸ்- திரை விமர்சனம்(3 / 5)
குடியிருப்பில் புதுமண தம்பதிகளின் வருகையால் உருவாகும் பாசம், திடீரென நிகழும் மர்மங்கள், மற்றும் சைக்கோ கணவனின் கொடுமைகள் மூலம் உருவாகும் திரைக்கதை, 'ஆக்டோபஸ்' திரைப்படத்தை விறுவிறுப்பாக மாற்றுகிறது. கதையின் மையத்தில் உள்ள சித்து, தன் வலிகளை தாங்கி, மர்மங்களை வெளிப்படுத்தும் பாத்திரத்தில் உணர்ச்சிபூர்வமாக நடித்துள்ளார்.
கதை
விழுப்புரம் மாவட்டம் ராமநகர் பகுதியில் உள்ள அன்பு நகர் குடியிருப்பில் வசிக்கும் குடும்பங்கள் தனித்தனியாக வாழ்ந்தாலும், ஒருவருக்கொருவர் பாசத்துடன் ஒரே குடும்பம்போல பழகி வருகின்றனர். அங்கு புதுமணத் தம்பதிகளான அஷ்வின் குமார் மற்றும் அவரது மனைவி சித்து குடி வருகின்றனர். அப்பகுதி மக்களிடம் மிக பணிவாகவும் பாசமாகவும் பழகி வரும் சித்து, எல்லோருக்கும் பிடித்தமானவராக மாறுகிறார். ஒருநாள் இரவு திடீரென பயங்கரமாக பெண்ணின் அலறல் சத்தம் கேட்கிறது. பதறியடித்து வெளியே வந்த அப்பகுதி வாசிகள் அந்த சத்தம் எந்த வீட்டிலிருந்து வந்தது என்று விசாரிக்க, சித்துவை அவளின் கணவர் தொடர்ந்து அடித்து துன்புறுத்தி வருகிறார். ஆனால் கணவன் மீது இருக்கும் பாசத்தால் அவை அனைத்தையும் சித்து மூடி மறைத்த வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் சித்து திடீரென காணாமல் போய்விடுகிறார். கணவர் அஷ்வின் குமாரிடம் அந்த பகுதி மக்கள் விசாரிக்க, அவர் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் இயல்பாக இருக்கிறார். சந்தேகமடைந்த குடியிருப்புவாசிகள் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கின்றனர். இறுதியில் சித்து எங்கே சென்றார்? அவர் உயிருடன் இருக்கிறாரா? அஷ்வின் குமார் மறைக்கும் ரகசியம் என்ன? என்பதே மீதிக்கதை.
நடிகர்கள்
துடிப்பான பெண்ணாக பிக்பாஸ் அர்ச்சனா நடித்திருக்கிறார். தனக்குக் கண்ணெதிரே நடக்கும் அநியாயங்களைக் கண்டு கொதிக்கும் கதாபாத்திரத்தில் உணர்ச்சிபூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இரண்டு விதமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிக்க வைத்து இருக்கிறார். கொடுத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி இருக்கிறார்.
கணவன் எவ்வளவு கொடுமை செய்தாலும், அதைத் தனது தவறுக்கான தண்டனையாக நினைத்து வலிகளைத் தாங்கிக்கொள்ளும் சித்து அளவான நடிப்பை வழங்கி இருக்கிறார். அஷ்வின் குமார், சைக்கோத்தனமான கதாபாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார்.
வினோத் கிஷன் - கலைவாணி பாஸ்கர் ஜோடியின் காதல் காட்சிகள் கதையின் பதற்றத்திற்கு நடுவே இதமான அனுபவத்தைத் தருகின்றன. கலைவாணி பாஸ்கருக்கு ஏற்படும் முடிவு, கதையின் முக்கியமான உணர்வுபூர்வமான தருணமாக அமைந்திருக்கிறது. மர்மம் நிறைந்த கதைக்கு ஜெயசந்திர ஹாஷ்மி விறுவிறுப்பான திரைக்கதை அமைத்திருப்பதால், ஒவ்வொரு எபிசோடிலும் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகிறது. தீபன் சக்ரவர்த்தியின் பின்னணி இசை கண்ணா ஆரின் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது.

