லெனின் பட போஸ்டர்
லெனின் பட போஸ்டர்

லெனின் பாண்டியன்- திரைவிமர்சனம்

கங்கை அமரனுக்கு பாதுகாப்பு வழங்கும் பொறுப்பு, உயர் அதிகாரிகளால் பெரிதாக மதிக்கப்படாத காவலரான தர்ஷன் கணேசனுக்கு கிடைக்கிறது.
Published on
லெனின் பாண்டியன்- திரை விமர்சனம் (3 / 5)
Summary

மணல் கொள்ளைக்கு எதிரான போராட்டத்தையும், ஒரு காவலரின் பொறுப்பையும் மையமாகக் கொண்ட சமூக அக்கறை கொண்ட படம் – லெனின் பாண்டியன்.

கதை

கிராமத்தில் வசிக்கும் கங்கை அமரன், ரோஜா தம்பதியினர் செல்லமாக வளர்த்து வரும் ஆடு, மணல் கொள்ளை கும்பலின் லாரியில் சிக்கி கொல்லப்படுகிறது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க செல்லும் கங்கை அமரனை போலீசார் விரட்டியடிக்கின்றனர். இதையடுத்து, ஊரில் நடைபெறும் மணல் கொள்ளைக்கு எதிராக குரல் கொடுக்கிறார்.

அவரது புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தும் வி.ஏ.ஓ அர்ச்சனா, ஆதாரங்களுடன் மணல் லாரிகளை பிடிக்கிறார். இதனால் ஆத்திரமடையும் யுகேந்திரன் அவரை கொலை செய்கிறார். இதையடுத்து கங்கை அமரன் நீதிமன்றத்தை நாட, வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுகிறது. மேலும், தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும் அவர் கோருகிறார்.

இதன் அடிப்படையில் கங்கை அமரனுக்கு பாதுகாப்பு வழங்கும் பொறுப்பு, உயர் அதிகாரிகளால் பெரிதாக மதிக்கப்படாத காவலரான தர்ஷன் கணேசனுக்கு கிடைக்கிறது. ஆரம்பத்தில் சாதாரண பணியாக நினைக்கும் அவர், வழக்கின் பின்னணியில் இருக்கும் ஆபத்துகளை உணர்ந்த பிறகு பொறுப்புடன் செயல்படத் தொடங்குகிறார். கங்கை அமரனை காப்பாற்றினாரா? மணல் கொள்ளை கும்பல் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டதா? என்பதே மீதிக்கதை.

நடிகர்கள்

கங்கை அமரன் தனது கதாபாத்திரத்தை மிகவும் இயல்பாக கையாண்டிருக்கிறார். ரோஜா, அவரது மனைவியாக சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார். தர்ஷன் கணேசன், சாதாரண காவலராக இருந்து பொறுப்பை உணரும் கதாபாத்திரத்தின் மாற்றத்தை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். போஸ் வெங்கட், ஜார்ஜ் மரியான், யுகேந்திரன், அர்ச்சனா, ஆடுகளம் நரேன் உள்ளிட்டோரும் தங்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிப்பை வழங்கியுள்ளனர்.

மணல் கொள்ளையை மையமாக வைத்து சமூகப் பிரச்சனையையும், ஒரு சாதாரண மனிதனின் போராட்டத்தையும் இணைத்து இயக்குநர் டி.டி.பாலச்சந்திரன் படத்தை உருவாக்கியிருக்கிறார்.

எட்வின் சாகேவின் ஒளிப்பதிவு கிராமத்து பின்னணியை இயல்பாக பதிவு செய்திருக்கிறது. இளையராஜாவின் இசை படத்திற்கு கூடுதல் பலம். குறிப்பாக ‘பூங்காற்று திரும்புமா...’ பின்னணி இசை வரும் காட்சிகள் ரசிகர்களை கவர்கின்றன.

மொத்தத்தில், மணல் கொள்ளைக்கு எதிரான போராட்டத்தையும், ஒரு காவலரின் பொறுப்பையும் மையமாகக் கொண்ட சமூக அக்கறை கொண்ட படம் – லெனின் பாண்டியன்.

X

Maalai Malar
www.maalaimalar.com