ஜான் டோ- திரைவிமர்சனம்

ஜான் டோ- திரைவிமர்சனம்

பிரீதா ஜெயராமனின் ஒளிப்பதிவு மலைப்பகுதிகளையும், திரில்லர் உணர்வை ஏற்படுத்தும் உட்புறக் காட்சிகளையும் அழகாகப் பதிவு செய்திருக்கிறது.
Published on: 
ஜான் டோ- திரைவிமர்சனம்(3.5 / 5)

கதை

கேரளா-தமிழ்நாடு எல்லையில் உள்ள குறிஞ்சி மேடு என்ற மலைப்பிரதேசத்தில் கதை நடைபெறுகிறது. வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் நீரவ் திடீரென காணாமல் போகிறான். இதற்கிடையே, கேரள போலீஸ் அதிகாரியாகப் பணியாற்றும் அர்ஜுன் தாஸ், எல்லைப் பகுதியில் கிடைத்த அடையாளம் தெரியாத சிறுவன் தொடர்பான விசாரணைக்காகத் தமிழகம் வருகிறார். காணாமல் போன நீரவ்க்கும், தான் விசாரிக்கும் சிறுவனுக்கும் தொடர்பு இருப்பதை உணர்ந்து விசாரணையைத் தொடர்கிறார்.

ஹிருதய் வழக்கை விசாரிக்கும் பெண் போலீஸ் அதிகாரி சஞ்சனா நடராஜன் ஆரம்பத்தில் ஒத்துழைக்க மறுத்தாலும், பின்னர் அர்ஜுன் தாசுடன் இணைந்து விசாரணை செய்கிறார். கடத்தப்படும் சிறுவர்கள் அனைவருக்கும் மேல்வரிசை பற்களுக்கு இடையில் இடைவெளி இருப்பதை கண்டறியும் அவர், அதன் மூலம் குற்றவாளியை நெருங்குகிறார். இதற்கிடையே நீரவ் உயிருடன் திரும்பி வந்தாலும், தனது பெயர் மற்றும் அடையாளத்தை மறந்து கேப்ரியல் என்று கூறுகிறான்.

இறுதியில் நீரவ்க்கு என்ன நடந்தது? சிறுவர்கள் கடத்தப்படுவதன் பின்னணி என்ன? குற்றவாளி யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்

போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் அர்ஜுன் தாஸ் கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிப்பை வழங்கியிருக்கிறார். சஞ்சனா நடராஜனின் பெண் போலீஸ் அதிகாரி கதாபாத்திர வடிவமைப்பு சிறப்பு. அதை அவர் சிறப்பாகக் கையாண்டிருந்தாலும், ஒரு கட்டத்தில் அவரது அதட்டல் ஓவர் டோசாக மாறுகிறது. சிறுவன் நீரவ் சிறப்பாக நடித்திருக்கிறார். சாரா, அனுபமா, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட மற்றவர்களும் கவனிக்க வைக்கிறார்கள்.

தொழில்நுட்ப குழு

மதுமிதாவின் இயக்கத்தில் காட்சிகளின் அமைப்பும், படமாக்கும் விதமும் சிறப்பாக இருக்கின்றன. பிரீதா ஜெயராமனின் ஒளிப்பதிவு மலைப்பகுதிகளையும், திரில்லர் உணர்வை ஏற்படுத்தும் உட்புறக் காட்சிகளையும் அழகாகப் பதிவு செய்திருக்கிறது. படத்துக்கான வண்ணத் தொனியும் கதையின் மனநிலைக்குப் பொருத்தமாக இருக்கிறது. முஜீப் மஜீத், ஆர்டிஸ்ட் 404 ஆகியோரின் பின்னணி இசை படத்துக்கு பலம் சேர்க்கிறது.

மிக இயல்பாகத் தொடங்கும் படம், சிறுவர்கள் கடத்தல் விசாரணையை மையமாகக் கொண்டு சுவாரஸ்யமாக நகர்கிறது. சில வழக்கமான திருப்பங்களுக்குப் பிறகு வரும் இடைவேளை டிவிஸ்ட் அருமை. இடைவேளைக்குப் பிறகு படம் வேகம் எடுத்து விறுவிறுப்பாகச் செல்கிறது.

ஒரு சைக்கோ கதாபாத்திரத்தைக் காட்டினாலும் அதற்கென்று ஒரு நியாயம் இருக்க வேண்டும். குற்றவாளி யார் என்பது தெரிந்த பிறகு, அதற்கான காரணத்தையும் பின்னணியையும் அழுத்தமாகச் சொல்லாமல் விட்டிருக்கிறார் இயக்குனர்.

X