இ1- திரை விமர்சனம்
இ1- திரை விமர்சனம் (2.5 / 5)
பாலியல் வன்கொடுமையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ‘இ1’ திரைப்படம், ஒரு இரவில் ஒரே வீட்டிற்குள் நடக்கும் பதற்றமான சம்பவங்களை சுவாரஸ்யமாக வெளிப்படுத்துகிறது. சதா நாடார் மற்றும் மோனிகா செலினாவின் நடிப்பும், ஒளிப்பதிவு மற்றும் இசையும் கதையின் மெருகை கூட்டுகின்றன. எனினும், முக்கிய கேள்விகளுக்கு விடை இல்லாததால் முடிவில் சற்று ஏமாற்றம் ஏற்படுகிறது.
கதை
அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் அமைந்துள்ள ‘இ1’ வீட்டில், கணவர் பணிநிமித்தமாக வெளியூர் சென்ற நிலையில், தனது குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார் மோனிகா செலினா. அமைதியாகத் தொடங்கும் அந்த இரவு, திடீரென அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று அரங்கேறுகிறது.
ஒருவரைக் கொலை செய்துவிட்டு, அவரது உடலுடன் மோனிகாவின் வீட்டிற்குள் நுழைகிறார் சதா நாடார். கொலை செய்தவனும், அருகில் பிணமும், வீட்டிற்குள் குழந்தையுடன் தனியாக ஒரு பெண்ணும் என அந்த இரவு முழுவதும் பதற்றம் நிறைந்த சூழல் நிலவுகிறது. மோனிகாவை மிரட்டியபடியே சதா நாடார் அங்கேயே இருக்க, அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகிறது.
அவர் கொலை செய்த நபர் யார்? எதற்காக அவரைக் கொலை செய்தார்? கொலை செய்துவிட்டு ஏன் பிணத்தை மோனிகாவின் வீட்டிற்குள் கொண்டு வந்தார்? என்ற கேள்விகளுக்கான விடைகளைத் தேடியபடியே கதை நகர்கிறது.
நடிகர்கள்
படத்தை இயக்கி நடித்துள்ள சதா நாடாரும், அவரது மனைவி மோனிகா செலினாவும் கதாநாயகன், கதாநாயகியாக கதையோடு ஒன்றிணைந்து பயணித்திருக்கின்றனர். தொடக்கம் முதல் இறுதிவரை படத்தை விறுவிறுப்பாகவும், அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்புடனும் நகர்த்தியிருக்கிறார் சதா நாடார்.
பாலியல் வன்கொடுமையை மையமாகக் கொண்டு, அக்குற்றத்தில் ஈடுபடும் கொடூரர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் படத்தை உருவாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
கொலையாளி ஒருபுறம், பிணம் மறுபுறம் என குழந்தையுடன் வீட்டிற்குள் சிக்கிக்கொண்டு தவிக்கும் காட்சிகளில் மோனிகா செலினாவின் நடிப்பு இயல்பாக அமைந்துள்ளது.
வில்லன் கதாபாத்திரத்தில் சுந்தரமும், நண்பன் கதாபாத்திரத்தில் பாண்டியும் தங்களது பங்களிப்பைச் சிறப்பாக வழங்கியுள்ளனர்.
ஒரே இரவில், ஒரே வீட்டிற்குள் கதையைத் தொடங்கி முடித்திருப்பது படத்தின் குறிப்பிடத்தக்க அம்சமாகும். எம்.எஸ். மனோ குமாரின் ஒளிப்பதிவும், ஈ.ஜே. ஜான்சனின் இசையும் கதையின் பதற்றமான சூழலோடு ஒன்றிணைந்து பயணிக்கின்றன. வீட்டிற்குள் நிலவும் அச்சத்தையும் மர்மத்தையும் காட்சிகளும் பின்னணி இசையும் நன்றாக வெளிப்படுத்துகின்றன. எனினும், படத்தின் மிகப்பெரிய குறையாக இருப்பது, கொலை செய்துவிட்டு பிணத்தை மோனிகாவின் வீட்டிற்குள் ஏன் கொண்டு வந்தார்? என்ற முக்கியமான கேள்விக்கான காரணத்தை இறுதிவரை தெளிவாக வெளிப்படுத்தாததுதான். இதனால் படத்தின் முடிவில் எதிர்பார்த்த அளவுக்கு தாக்கம் ஏற்படாமல், சற்று ஏமாற்றம் அளிக்கிறது.
இருப்பினும், பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் கொடூரர்களுக்கு எதிராகக் கடும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் உருவாகியிருக்கும் ‘இ1’, குற்றவாளிகளுக்கு எச்சரிக்கைப் பாடமாக அமைந்துள்ளது.

