

கல்லூரி மாணவர்கள் மூவரும் போலீசில் சிக்கியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, அறிவியல் ஆராய்ச்சிக் கூடத்தில் தஞ்சம் அடைகிறார்கள். அங்கு டிரோன் கருவி மூலம் வெளியுலகத்தைப் பார்க்க முயற்சிக்கும் போது, காதல், மர்மம், சுவாரஸ்யம் நிறைந்த சிக்கல்களில் சிக்குகிறார்கள். சித்தி இத்னானியின் அழகும் தேவதர்ஷினியின் சூனியமும் கதையை விறுவிறுப்பாக மாற்றுகின்றன.
கல்லூரியில் படிக்கும் டிராவிட் செல்வம், அஞ்சலி நாயர், ஆர்.ஜே. தீபக் ஆகிய மூவரும் கல்லூரிக்குத் தெரியாமல் வெளியே சுற்றித் திரிந்தபோது போலீசில் சிக்கிக் கொள்கிறார்கள். இதனால் கல்லூரி நிர்வாகம் மூவரையும் சஸ்பெண்ட் செய்கிறது. பெற்றோரிடம் உண்மையைச் சொல்லப் பயப்படும் மூவரும், ‘பிளாக் ஹோல்’ எனப்படும் அறிவியல் ஆராய்ச்சிக் கூடத்தில் தஞ்சம் அடைகிறார்கள். ஆனால், அங்கே சென்ற பிறகுதான் அவர்களுக்குப் புதுப்புது பிரச்சனைகள் முளைக்கின்றன. உள்ளே சென்றவர்களால் வெளியே வர முடியாத சூழல் உருவாகிறது.
வெளியுலகத்தைப் பார்க்க அங்கிருக்கும் டிரோன் கருவியைப் பயன்படுத்தும் மூவருக்கும் ஓர் எதிர்பாராத ஆச்சரியம் காத்திருக்கிறது. அங்கே சித்தி இத்னானியைப் பார்க்கும் டிராவிட் செல்வம், முதல் பார்வையிலேயே காதல் வலையில் விழுகிறார். காதலை வளர்க்க நினைத்தவருக்கு எதிராகக் களமிறங்குகிறார் சித்தி இத்னானியின் சூனியக்காரப் பாட்டியான தேவதர்ஷினி. காதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதோடு நிற்காமல், மூன்று மாணவர்களையும் சிறைப்பிடிக்கிறார்.
இதற்கிடையே காணாமல் போன மாணவர்களைத் தேடி அங்கு வரும் காவல்துறை அதிகாரியும் சித்தி இத்னானியின் அழகில் மயங்குகிறார். அவரும் சிக்கலில் மாட்டிக்கொள்கிறார். காதல், காமெடி, மர்மம் எனக் கதை பல திசைகளில் பயணிக்கிறது. சித்தி இத்னானியின் பின்னால் இருக்கும் மர்மம் என்ன? தேவதர்ஷினி பிடியிலிருந்து மாணவர்கள் தப்பித்தார்களா? என்பதுதான் மீதிக்கதை.
அழகில் தேவதையாக மிளிரும் சித்தி இத்னானி, தனது தோற்றத்தால் ரசிகர்களைக் கவர்வதோடு, ஆக்ரோஷமான முகபாவனைகளால் கதையில் திருப்பத்தையும் ஏற்படுத்துகிறார். அஞ்சலி நாயர் அழுத்தமான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். காமெடி கதாபாத்திரத்தில் வரும் டிராவிட் செல்வம், தனது இயல்பான நடிப்பால் கலகலப்பைக் கூட்டுகிறார். அவரது காட்சிகள் சிரிப்புக்கு உத்தரவாதம் அளிக்கின்றன. சூனியக்காரப் பாட்டியாக வரும் தேவதர்ஷினி, வித்தியாசமான கதாபாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார். அவரது உடல்மொழியும் நடிப்பும் படத்துக்குக் கூடுதல் பலம்.
காவல்துறை அதிகாரியாக வரும் சினிமாவாலா சதீஷ், குரேஷி, ஆர்.ஜே. தீபக், சசி செல்வராஜ் ஆகியோரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களைச் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் ஜெயந்த் சேது மாதவனின் கேமரா, கதையின் பின்னணிக்கும் காட்சிகளுக்கும் பொருத்தமாகப் பயணித்து ரசிக்க வைக்கிறது. இசையமைப்பாளர் ஹரி எஸ்.ஆர். இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். காமெடியை மையமாகக் கொண்டு, அறிவியல் பின்னணியையும் மர்மத்தையும் கலந்து வித்தியாசமான கதையைச் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் ஆர். ராகவ் மிர்தாத்.
ஒரு சில இடங்களில் கதை இன்னும் விறுவிறுப்பாக நகர்ந்திருக்கலாம் என்ற எண்ணம் தோன்றினாலும், நகைச்சுவைக் காட்சிகளும் வித்தியாசமான கதைக்களமும் அந்தக் குறையை மறக்கச் செய்கின்றன.