பத்தா பட காட்சி
பத்தா பட காட்சி

பத்தா- திரை விமர்சனம்

எஸ்.கே.செல்வகுமாரின் ஒளிப்பதிவு அன்றைய காலக்கட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது. சாய் அபயங்கரின் இசை படத்துடன் ஒன்ற வைக்கிறது.
Published on: 
பத்தா- திரை விமர்சனம் (4 / 5)
Summary

ஒரு ரவுடி மற்றும் சிறுவனுக்கிடையேயான எதிர்பாராத சம்பவங்கள், உணர்ச்சிப்பூர்வமான பாசப்பிணைப்பை உருவாக்கும் கதை. விஜய் சேதுபதியின் மாறுபட்ட நடிப்பு, லிஜோமோல் ஜோஸின் பிரகாசமான தோற்றம், மற்றும் சிறுவன் சாய் பிரித்விராஜின் சுட்டித்தனமான நடிப்பு படம் முழுவதும் ரசிக்க வைக்கிறது.

கதை

ஊரே பயம் கொள்ளும் ரவுடியாக இருக்கும் விஜய் சேதுபதி, சாராயம் காய்ச்சி பிழைப்பு நடத்துகிறார். கட்ட பஞ்சாயத்துகளிலும் ஈடுபட்டு வருகிறார். மனைவி லிஜோ மோல் ஜோஸ் மற்றும் மகள் சகஸ்ரா மீதும் அடிக்கடி கோபமாகவே நடந்து கொள்கிறார்.

அதேவேளை அந்த ஊரில் சுட்டித்தனம் செய்யும் சிறுவன் சாய் பிரித்விராஜ், எதிர்பாராதவிதமாக விஜய் சேதுபதியை மூடப்பட்டிருக்கும் ஒரு பள்ளியின் கழிவறைக்குள் வைத்து பூட்டி விடுகிறார். கழிவறைக்குள் வைத்து தான் மூடியது ரவுடி விஜய் சேதுபதி தான் என்பது தெரியவர பயத்தில் உறைகிறார்.

ஒருவருக்கொருவர் முற்றிலும் அறிமுகம் இல்லாத நிலையில் விஜய் சேதுபதிக்கும், சிறுவன் சாய் பிரித்விராஜூக்கும் ஒரு உறவு ஏற்படுகிறது. இதற்கிடையில் விஜய் சேதுபதியின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. அந்த ஆபத்தில் இருந்து விஜய் சேதுபதி தப்பித்தாரா? மூடப்பட்டிருக்கும் பள்ளிக்கு இருவரும் சென்றது ஏன்? அடுத்து என்ன ஆனது? என்பதே படத்தின் மீதி கதை.

விஜய் சேதுபதி

பத்தா என்ற பக்தவத்சலமாக விஜய் சேதுபதியின் மாறுபட்ட நடிப்பு படம் முழுக்க கவனிக்க வைக்கிறது. ரவுடியாக சுற்றித்திரியும் அவர், ஒருகட்டத்தில் மனம் மாறும் போது ரசிக்க வைக்கிறார். கை தேர்ந்த நடிகர் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டார்.

நடிகர்கள்

குடும்ப குத்து விளக்காக படம் முழுக்க பிரகாசிக்கிறார் லிஜோமோல் ஜோஸ். 'ஜெய்பீம்' படத்துக்கு பிறகு மீண்டும் 'ஸ்கோர்' செய்திருக்கிறார்.

விஜய் சேதுபதிக்கு சிம்ம சொப்பனமாக வரும் சிறுவன் சாய் பிரித்விராஜின் சுட்டித்தனமான நடிப்பு கலகலப்புக்கு 'கியாரண்டி'. விஜய் சேதுபதியின் மகளாக வரும் சிறுமி சகஸ்ராவின் எதார்த்த நடிப்பும் மனதில் பதிகிறது.

அஜய் கோஷ், சாந்தி பாலச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்ட அனைவருமே தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர்.

இசை, தொழில்நுட்ப குழு

எஸ்.கே.செல்வகுமாரின் ஒளிப்பதிவு அன்றைய காலக்கட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது. சாய் அபயங்கரின் இசை படத்துடன் ஒன்ற வைக்கிறது.

ரசிக்க வைக்கும் எதார்த்த காட்சிகள் படத்துக்கு பலம். சில இடங்களில் நாடகத்தனமாய் காட்சிகள் நகர்வது ஏனோ... இன்னும் புதுமையான காட்சிகளை புகுத்தி இருக்கலாம்.

ஒரு ரவுடிக்கும், ஒரு சிறுவனுக்கும் இடையே நடக்கும் நிகழ்வுகளை கலகலப்பு குறையாத காட்சிகளாக அடுக்கி இறுதியில் உணர்ச்சிப்பூர்வமாய் யோசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் பாலாஜி தரணிதரன். இயக்குனர் அட்லி தயாரித்திருக்கிறார்.

பத்தா- பாசப் பிணைப்பு.

X

Maalai Malar
www.maalaimalar.com